
எனது தோழி மகள் குளித்து முடித்து சீருடை அணிந்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்பாக பல் தேய்த்துவிட்டு வருவாள். இத்தனைக்கும் முகத்தில் பவுடர் அடித்து பொட்டு வைத்து தலைவாரிய பிறகுதான் பல் தேய்ப்பாள். வீட்டார் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். குளிப்பதற்கு முன்பாக எழுந்ததுமே பல் தேய்த்தால் என்ன? சீருடை மாற்றிக்கொண்டு சாப்பிடுவதற்கு முன்பாக பல் தேய்க்கிறாயே இது நியாயமா? முதலில் செய்ய வேண்டியதை கடைசியில் செய்கிறாயே? எப்பொழுதுதான் திருந்த போகிறாயோ என்று திட்டுவார்கள். அதற்கு அவள் சாப்பிடுவதற்கு முன்பு பல் தேய்க்கவேண்டும் அவ்வளவுதானே. அது எப்பொழுது செய்தால் என்ன என்று கேட்பாள்.
அதேபோல் இன்னொரு தோழியின் பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்து டிவி பார்த்து, விளையாட்டு எல்லாம் முடித்த பிறகுதான் வீட்டுப் பாடங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நன்றாக தூக்கம் வரும் தூங்கி விடுவார்கள். வீட்டு பாடங்கள் அப்படியே இருக்கும். அடுத்த நாள் பள்ளிக்குச் செல்லும் பொழுது தண்டனையோடு திரும்பி வருவார்கள். இப்படி எதை முதலில் செய்ய வேண்டுமோ அதை சமயத்தில் செய்து முடித்து விட்டால் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கலாம். அதை விடுத்து கடைசியாக செய்ய வேண்டியதை முன்பாகவே செய்தால் என்ன நடக்கும் பிறரின் கேலிக்கூத்துக்கு எப்படி ஆளாகும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
தலைக்கு அடியில் கை வைத்துக்கொண்டு கடற்கரை மணலில் படுத்தபடி ஆனந்தமாக கடல் அலைகளைப் பார்த்தவாறு இருந்தான் அந்த மனிதன். அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர் அந்த மனிதனைப் பார்த்து 'ஏன் இப்படி சோம்பேறியாக பொழுதைக் கழிக்கிறாய்? 'என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதன் சொன்னான். நான் ஒன்றும் பொழுதை வீணாக்கவில்லை என்று சொல்லிவிட்டு "சரி என்னை விடுங்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டான்.
நான் உலகையே கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றப் போகிறேன். கைப்பற்றிய பிறகு உலகே என் வசமானதும் ஊரைவிட்டு ஆனந்தமாக அமைதியாக இயற்கையை ரசித்தபடி பொழுதைப் போக்குவேன் என்று அலெக்சாண்டர் சொல்லிவிட்டு அந்த மனிதனை அலட்சியமாகப் பார்த்தார்.
அதற்கு அந்த மனிதன் சொன்னான், கடைசியாக நீங்கள் எதைச் செய்யப் போகிறீர்களோ அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்!
இப்படி எக்கு தப்பாய், எந்த வேலையையும் தொடர்பவர்களை திருத்துவது அவ்வளவு சாமர்த்தியம் இல்லை. அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு. ஆதலால் எதை செய்ய நினைத்தாலும் அதை அதை எப்படி சரியாக, முறையாக, இலகுவாக செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்பட்டால் மற்றவர்களின் கேலிக்கூத்துக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம் .நாமும் வாழ்வில் வளர்ச்சி அடையலாம். எடுத்த காரியம் எதிலும் வெற்றியும் கிட்டும்.