கடினமான சூழ்நிலையையும் அமைதியாக கையாள்வது எப்படி தெரியுமா?

A difficult situation
motivational articles
Published on

வாழ்க்கை என்பது மாற்றத்தைக் கொண்டது. இந்த மாற்றங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ இருக்கலாம். எதிர்மறையான வாழ்க்கை மாற்றங்கள் நம்மைத் தள்ளாட செய்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும். இந்த கடினமான சூழ்நிலையை நிர்வகிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் பொழுது நம் மன அழுத்தத்தை குறைக்க முதலில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அவசியம். எதிர்காலம் என்பது வெறும் யூகம் மட்டுமே. எனவே அவற்றை நினைத்து குழம்பிக் கொள்ளாமல் அனுபவம் வாய்ந்த நண்பரிடமோ, உறவினரிடமோ மனம் திறந்து பேசி அவர்களின் கருத்தைப் பெறலாம்.

கடினமான சூழ்நிலையை பற்றி புலம்புவதையோ, கவலைப்படுவதையோ விட்டு அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பது நல்லது. அந்தக் கடினமான சூழ்நிலையை புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும் அணுகுவதே சிறப்பு. எக்காரணம் கொண்டும் அந்த இறுக்கமான சூழ்நிலையை தவிர்ப்பதை விடுத்து நேராக எதிர்கொண்டு முன்னேற பார்க்க வேண்டும். ஏனெனில் நாம் அதை எவ்வளவு வேகமாக அந்தப் பிரச்னையிலிருந்து அதாவது அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளி வருகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் சுதந்திரமாக இருப்பதாக உணருவோம்.

இக்கட்டான சூழ்நிலையில் சில ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்வதும், அந்த சூழ்நிலையில் இருந்து சிறிது நேரம் விலகி இருப்பதும் நம்மை அமைதியாக்கி, நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க உதவும். பிரச்னையின் மூலக் காரணத்தை கண்டறிந்து முடிந்தவரை நிலைமையை புரிந்துகொண்டு சிறந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணர்ச்சிகளை காட்டிலும் உண்மையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க தயங்க வேண்டாம். பிரச்னையிலிருந்து ஓடாமல் யதார்த்தத்தை ஏற்று விலைமதிப்பற்ற நம் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல் அதன்படி முடிவு எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
யாரையும் குறை கூறக் கூடாது ஏன் தெரியுமா?
A difficult situation

இக்கட்டான சூழ்நிலையை தைரியத்துடனும், நம்பிக்கையுடனும்  எதிர்கொள்ளும் சமயம் எக்காரணம் கொண்டும் அதற்கான முடிவை ஒத்தி போடாமல் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து அதனை வேகமாக தீர்க்க (முடிக்க) பார்க்க வேண்டும். இது நம் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் வெகுவாக குறைக்கும். எந்த ஒரு பிரச்னையையும் சந்திக்கும்போது நம்மால் முடியாது என்று நினைத்தோமானால் அது எதிர்வினை ஆற்றி அந்த செயலை பற்றிய சிந்தனையை நமக்குள் உருவாக்காது. எனவே எந்த சவாலையும் அதன் மூலம் உருவாகும் கஷ்டங்களையும் எதிர்த்து போராட கற்றுக் கொண்டால் அதுவே நம் வாழ்க்கை பயணத்திற்கு சிறந்த படிக்கல்லாக அமையும்.

கடினமான சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் சமயம் சுய பரிதாபத்தில் மூழ்கி விடாமல் இருப்பதுடன், அந்த சூழ்நிலைக்கு வேறு யாரையாவது குற்றம் சாட்டி சக்தியை வீணாக்காமல் இருக்கப் பழகவும். அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டு அதற்கான ஒரு காலக் கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பலனளிக்கவில்லை என்றால் சோர்வடையாமல் பட்டியலில் உள்ள மற்றொன்றை முயற்சிக்க நல்ல பலனைத் தரும். 

மொத்தத்தில் கடினமான சூழ்நிலையை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய வளர்ச்சியும் வெற்றியும் உள்ளது. அமைதியாக, திறம்பட செயலாற்றி, தீர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதாக வெற்றி கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com