நாம் எவ்வளவுதான் பாசிட்டிவான எண்ணங்களுடன் இருந்தாலும், சில சமயங்களில் நம்மை சுற்றியுள்ளவர்களே நம்முடைய நம்பிக்கையை உடைப்பதுபோல நம்மை Demotivate செய்வதுண்டு. அதையெல்லாம் நாம் எப்படி கையாண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் தெரியுமா? அதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள இந்தக் குட்டிக்கதையை பார்ப்போம்.
ஒருநாள் அந்த கிராமத்தில் இருந்த குளத்தை சுற்றி நிறைய மக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஒரு வயதானவர் அப்படி இவர்கள் எல்லாம் என்ன தான் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள் என்று போய் பார்த்தப்போது, அந்தக் குளத்தில் அழகான தாமரைப்பூ ஒன்று மலர்ந்திருந்தது. இப்போது அந்த வயதானவரும் அங்கே நின்று தாமரைப்பூவின் அழகை சற்று நேரம் வியந்து பார்க்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு கேள்வியும் தோன்றுகிறது. அந்த தாமரைப்பூவை பார்த்து, ‘உன்னை சுற்றி இவ்வளவு அழுக்கான தண்ணீர் இருந்தாலும் எப்படி உன்னால் இவ்வளவு தூய்மையாக இருக்க முடிகிறது?' என்று கேட்கிறார். அதற்கு பதிலுக்கு அந்த தாமரை என்ன சொன்னது தெரியுமா?
நீங்கள் சொன்னதுபோல நான் ஒரு அழுக்கான சேற்றுத் தண்ணீரில்தான் வளர்கிறேன். ஆனால், எக்காரணம் கொண்டும் அந்த சேறை என் மீது நான் படவிடவில்லை. அதற்கு பதிலாக வானத்திலிருந்து வரும் சூரிய ஒளிகளை நான் எடுத்துக்கொண்டதால்தான் என்னால் இந்த அளவிற்கு தூய்மையாக இருப்பதோடு உயர்ந்து வளரவும் முடிந்தது என்று சொன்னதாம்.
இந்தக் கதையில் வந்தது போலத்தான் நம்முடன் இருப்பவர்களே நம்மை Demotivate செய்கிறார்களே என்று நினைத்து வருத்தப்படுவோம். ஆனால், அந்த தாமரைப்பூவை பாருங்களேன். அது என்னதான் அழுக்கு தண்ணீரில் வளர்ந்திருந்தாலும், அந்த சேறை தனக்குள் எடுத்துக்கொள்ளாமல் சூரியனின் தூய ஒளியை எடுத்துக்கொண்டது. இதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், நம்முடைய வாழ்க்கையும் என்றைக்குமே தூய்மையாக இருக்கும். இதை மனதில் வைத்து முயற்சித்துப் பாருங்கள். கண்டிப்பாக நீங்களும் வாழ்வில் வெற்றிபெற முடியும்.