பொறுப்பற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும். குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்ககூடும். ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம். ஒரு முரட்டுச்சொல் மரணத்தை உண்டாக்கலாம். ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம். ஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்சமாக்கலாம். ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம். ஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்.
ஒரே ஒரு சொல்லால் மற்றவர்கள் வாழ்வு மாறுகின்ற அளவுக்குச் சொற்களில் சூத்திரம் அடங்கியிருக்கின்றது. அதனால்தான் மொழியைக் கையாளுவதில் லாவகமும், பக்குவமும் தேவைப்படுகிறது ஒரே ஒரு காற்ப்புள்ளியை மாற்றிப்போட்டால் பொருளே மாறிப்போய்விடும்
காற்புள்ளியை மாற்றி ஒருவர் உயிரையே காப்பாற்றிய வரலாறு கூட உண்டு. ஸாரினா மரியா (Czarina Maria) என்கிற பெண்மணி தன் கணவர் அலெக்ஸாண்டர் ஒரு குற்றவாளியைச் சிறைக்கு அனுப்ப "மன்னிக்க முடியாது. சைபீரியாவுக்கு அனுப்புக!" (Pardon impossible to be sent to siberia) என்பதை மாற்றி "சைபீரியாவுக்கு அனுப்ப முடியாது, மன்னிக்க" (Pardon, impossible to be sent to Siberia) எனத் திருத்தி விடுவித்த கதை வரலாறு ஆனது.
ஒரு சொல்லைச் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எழுதும்பொழுது இன்னமும் உன்னிப்பாக இருக்க வேண்டும். நாம் எழுதிய கடிதம் சிலரது கல்லாப்பெட்டிகளில் கரன்சி நோட்டுகளைப் போலப் பாதுகாக்கப்பட நேரிடலாம்.
நம் வார்த்தைகள் சொல்வெட்டுகளாக இருந்தால் அவை கல்வெட்டுகளைப் போலப் பாதுகாக்கப்படும். புத்தர், சாக்ரடீஸ், காந்தி போன்ற புனிதர்கள் உதிர்த்த ஒவ்வொரு சொல்லுமே இன்று ஆவணமாக்கப்பட்டு ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்குக் காரணம். அவர்கள் அந்தச் சொற்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பிரசவித்ததால்தான்.
நாம் ஒன்றைப் பிறருக்குச் சொல்லும்போது தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் அவர்கள் நாம் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டிருக்கிறார்களா இல்லையா? என்று
மற்றவர்களை மிரட்டிப் பயப்படுத்துகிற சூழலில் நாம் எந்த உத்தரவுகளைப் போட்டாலும், அதைக் கீழ்நிலையி லுள்ளவர்கள் பதற்றத்துடன்தான் புரிந்துகொள்வார்கள். பதற்றம் இருந்தாலே மூளையின் செயல்பாடு பாதியாகக் குறைந்துவிடும்.
நம்முடைய சொற்கள் பிறருடைய இதயத்தில் விதையாக விழவேண்டும் - விஷமாக இறங்கக்கூடாது. பூவாக உதிரவேண்டும்; முள்ளாகக் கிழிக்கக்கூடாது.