மனதளவில் வலிமை பெறுவதற்கு எல்லா உணர்ச்சி களையும் துறந்துவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. நம் உணச்சிகளை எப்படி கடந்து அழகாக பயணிப்பது என்னும் கலையை கற்றுக்கொண்டால் போதுமானது. அந்த கலையை கற்க திடமான மனதுடையோர் பின்பற்றும் இந்த 12 விதிமுறைகளை நாமும் செய்தாலே போதுமானதாகும்.
1.நம்மைப் பற்றி நாமே நினைத்து வருத்தப்படுவது, பரிதாபப்படுவது போன்றவற்றை திடமான மனதுடையவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யும்போது அது நம் மனதினுள் நெகட்டிவான எண்ணங்களை உருவாக்கும். சுயப்பரிதாபத்தை விடுத்து நமக்கு கிடைத்திருப்பதை எண்ணி கடவுளுக்கு நன்றி கூறுவதே சிறந்த செயலாகும்.
2.திடமான மனதுடையோர் தன்னுடைய இலக்கை மிகவும் இறுக்கமாக பிடித்து கொள்வார்கள். தன்னுடைய இலக்கிலேயே தொடர்ந்து பயணிப்பார்கள். அதை தவிர்த்து வேறு எங்கும் பயணிப்பதை விரும்ப மாட்டார்கள்.
3.தன்னால் கட்டுப்படுத்த முடியாத எதையும் தளர்வாக விட்டு விடுவார்கள். அதை நினைத்து பதற்றப்படுவதோ, வருத்தப்படுவதோ வீண் நேர விரயம் என்று எண்ணுவார்கள்.
4.மாற்றத்தை எண்ணி வெட்கப்படமாட்டார்கள். மாற்றம் தான் நம்முடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதை திடமாக நம்புபவர்கள்.
5.மற்றவர்களிடம்தான் யார் என்பதை உணர்த்த விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
6.கடந்த காலத்தை பிடித்துக்கொண்டு வாழ மாட்டார்கள். எதிர்காலத்தை பற்றியும், நிகழ்காலத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பார்கள்.
7. அவர்கள் ஒருமுறை செய்த தவறை திரும்ப திரும்ப செய்வதில்லை. அவர்கள் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தமுறை அதை மாற்றியமைக்க கற்றுக்கொள்வார்கள்.
8. அடுத்தவர்களின் வெற்றியை கண்டு வெறுப்படைய மாட்டார்கள். நம்மால் அவர்களைப் போல வர முடியவில்லையே என்று பொறாமைப்படவும் மாட்டார்கள்.
9.முதல் தடவை தோல்வி அடைந்தால் விட்டுவிட்டு செல்ல மாட்டார்கள். வெற்றி பெறும் வரை திரும்ப திரும்ப முயற்சிக்கும் ஆற்றலை உடையவர்கள்.
10. இவர்கள் தனிமையை கண்டு பயப்பட மாட்டார்கள். தனிமையில் இருப்பதுதான் புது எண்ணங்கள் தோன்றுவதற்கான தொடக்கமாக இருக்கும் என்று நம்புபவர்கள்.
11. திடமான மனதை உடையவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள தெரிந்தவர்கள், மற்றவர்கள் தங்களை பற்றி கூறும் குறைகளை ஆராய்ந்து, அதில் ஏதேனும் பிழை இருப்பின் திருத்திக் கொள்பவர்கள்.
12.ஒரு செயலை செய்தவுடனே வெற்றியைத்தேடி காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். அவர்களுடைய எண்ணம் நிரந்தர வெற்றியை தேடியே இருக்கும்.
நீங்களும் திடமான மனது படைத்தவர்கள் பின்பற்றும் இந்த 12 விதிமுறைகளை உங்கள் வாழ்விலும் பயன்படுத்தி பாருங்களேன், நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணருவீர்கள்.