மிகவும் சோர்வான மனநிலையில் இருக்கும்பொழுது மனம் எதிலுமே நிலைத்து நிற்காது. அதை போக்கிக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுவதும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் நல்ல தெம்பு ஊட்டுகிற, மனதிற்கு உறுதியளிக்கின்ற வார்த்தைகளை பேசுபவர்களோடு சிறிது நேரம் செலவிட்டுப் பாருங்களேன். தெளிந்த நீரோடைபோல் ஆகிவிடும் நம்முடைய மனது.
நாம் பேசுகின்ற வார்த்தைகளால் எந்த ஒரு தொய்ந்த மனதையும் துள்ளல் போட வைக்க முடியும். சலிப்பாக அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை ஆர்வமுடன் செய்ய வைக்க முடியும்.
ஒருமுறை இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்தார் விவேகானந்தர். வழியில் முதியவர் ஒருவர் மலைப்பாதையில் ஏற இயலாமல் களைத்துபோய் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த முதியவர் விவேகானந்தரிடம் அப்பாடி, இந்தப் பாதையை எப்படி கடப்பேன். இனிமேல் என்னால் நடக்க முடியாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது என்றார்.
விவேகானந்தர் அந்த முதியவர் கூறியதை பொறுமையுடன் கேட்டார். பிறகு அவரிடம் பெரியவரே சற்று கீழே பாருங்கள். உங்கள் காலுக்குக் கீழே நீண்டு தெரிகின்ற அந்தப்பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். உங்கள் முன்னால் நீண்டு கிடக்கின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்து விடும் என்றார்.
தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளைக் கேட்டதும், முதியவரிடம் புதிய உற்சாகம் பிறந்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
சிலர் இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். அவர்கள் பேசுகின்ற வார்த்தைக்காகவே அவரிடம் நட்பு பாராட்டுபவர்கள் அதிகம் இருப்பதையும் காணமுடியும். அவர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுப்பவர்கள் அல்ல. சாதாரண வார்த்தை ஜாலங்களாலேயே எல்லோர் மனதிலும் குடிகொண்டு விடுவர். சிறு கோலத்தில் இருக்கும் பச்சரிசிமாவு எறும்புக்கு உணவாவதைப்போல், இடம் பொருள் பார்த்து நாம் பேசுகின்ற வார்த்தையும் பலரின் செவிக்கு உணவாவதை அறியலாம்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவே கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்கிறார் திருவள்ளுவர்.
ஆதலால், மனம் சோர்வடையும்போது நம்பிக்கையாய் பேசுபவர்களோடு நேரத்தை செலவிடுங்கள். வார்த்தையிலேயே வைத்தியம் பார்த்து விடுவார்கள்...!