பாசிட்டிவாக யோசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
மனித மனம் என்பது வாழ்வில் ஏதேனும் சிறு துன்பம் ஏற்பட்டால் கூட உடனேயே நெகட்டிவாக யோசிக்கும் குணத்தைக் கொண்டது. அத்தகைய தருணத்தில் பாசிட்டிவாக சிந்தித்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அதைப்பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
அரசர் ஒருவர் நிறைய தவறுகள் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை அறிவிக்கிறார். அவனை தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக, 'உனக்கு ஏதேனும் ஆசைகள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்.
அதற்கு அந்த திருடன், 'அரசரே! என்னுடைய அனுபவத்தில் எனக்கு நிறைய போர் வித்தைகள் தெரியும். எனக்கு ஒரு மூன்று மாதங்கள் கால அவகாசம் கொடுத்தால், அதற்குள் எனக்கு தெரிந்தவற்றை முழுதாக உங்களுக்கு சொல்லிக் கொடுத்து விடுவேன். அதற்கு பிறகு நீங்கள் வேண்டுமென்றால், என்னை தூக்கிலிடுகள்!' என்று சொல்ல அரசரும் இதை ஏற்றுக்கொண்டு அவனுடைய தண்டனையை மூன்று மாதம் தள்ளி வைக்கிறார்.
இப்போது சிறையில் கூட இருக்கும் குற்றவாளிகள் திருடனிடம், 'உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அந்த அரசர் எப்படியிருந்தாலும் உன்னை கொல்லத்தான் போகிறார். பிறகு ஏன் நீ மூன்று மாதம் அவகாசம் வாங்கினாய்?' என்று கேட்க அதற்கு அந்த திருடன் என்ன சொன்னான் தெரியுமா?
நான் ஒன்றும் அந்த அரசரிடமிருந்து வெறும் கால அவகாசத்தை மட்டும் வாங்கவில்லை. மூன்று சாத்தியங்களையும் சேர்த்துதான் வாங்கியிருக்கிறேன் என்று கூறினான். ‘அரசருக்கு மிகவும் வயதாகிவிட்டது இந்த மூன்று மாதத்தில் அவர் இறந்துப் போகக்கூட வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் நான் கற்றுக்கொடுக்கும் திறமைகளைப் பார்த்து அரசர் என்னை மன்னித்துவிடக்கூட வாய்ப்புகள் இருக்கிறது.
இது எதுவுமே வேலை செய்யவில்லை என்றால், 'இந்த மூன்று மாதக்காலத்தில் நான் இங்கிருந்து தப்பித்து செல்வதற்கான நல்ல சூழ்நிலை அமையக்கூட வாய்ப்பிருக்கிறது. ஏதேனும் பிரச்னை வந்தால் என் கடைசி மூச்சிருக்கும் வரை அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிப்பேன்’ என்று கூறினாராம்.
இதுபோலத்தான் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போது அதை பாசிட்டிவாக கையாள வேண்டியது அவசியமாகும். நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்களேன்.