மூத்தவர்களிடம் கற்கும் அனுபவ பாடத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா?

Motivation Image
Motivation Imagepixabay.com

யது முதிர்ந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, உறவினர்கள் என அனைவரிடமும் அறிவு, அனுபவம், அணுகுமுறைகள், விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் என பல பல புதிய தகவல்கள், விஷயங்களை கேட்டு, பேசி தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய சூழலில் பெரியவர்கள் பாதி பேர் முதியோர் இல்லத்தில், கிராமங்களில் என காலத்தை கழிக்க வேண்டியுள்ளது. பல விஷயங்களை அவர்களிடம் கற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகளும் தனியாக வளரும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

அனுபவப் பாடத்திற்கு உதாரணம் பெரியவர்கள் என்பதை உணரலாம்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை மலைப் பகுதியில் விட்டுவிட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

இந்தச் சட்டம் நடை முறையில் இருந்தபோது ஒரு தந்தையும்,  மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.

நாளடைவில் தந்தை முதுமைப் பருவத்தை அடைந்தபோது, அந்நாட்டு சட்டப்படி அவரை மலைப்பகுதியில் விடவேண்டிய நிலை வந்தது.

தந்தையைப் பிரிய மனமில்லாமல் மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. உடனே தன்னுடனே வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து வீட்டின் பின் பகுதியில் தெரியாமல் ரகசியமாக வைத்து உணவளித்து வந்தான்.

ரு நாள் அரசன் தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி போட்டி வைத்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே போட்டி. மக்கள் போட்டியைக் கேட்டதும் யாராலும் உருவாக்க முடியவில்லை.

அந்த மகன் போட்டியை தன் தந்தையிடம் கூற, தந்தை மகனிடம் பெரிய தாம்பாளத்தில் முறுக்கிய கயிறை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும், தந்தை கூறிய செய்து அரசனிடம் காண்பித்து பரிசை பெற்றான்.

ரு மாதம் கழித்து இரண்டாவது போட்டியை அரசன் அறிவித்தான்.

ஒரு மரக் கொம்பைக் கொடுத்து இதில் அடி, நுனி எது என கண்டு பிடித்து தருமாறு மக்களுக்கு ஆணையிட்டான். யாராலும் அடி எது? நுனி எது? என கூற முடியவில்லை.

மகன், தந்தையிடம் இதைக் கூறவே, தந்தை மரக்கொம்பை நீரில் போட்டால் அது லேசாக சாய்வாக மூழ்கும், அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி  அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் இதை செய்துகாட்டி பரிசைப் பெற்றான்.

அரசன் மூன்றாவதாக ஒரு கடுமையான போட்டியை வைத்தான்.அதாவது கை வைத்து தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போல எல்லா மக்களும் பின் வாங்கினர்.

இதனை மகன் சோர்ந்து போய் தந்தையிடம் கூறினான்.

மகனே, மேளத்திற்கு தேவையான தோல்களை தயார் செய்து மலைப்பகுதிக்கு சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்' என்றார்.

மகனும், மேளத்தை  தயார் செய்து அதனை அசைக்காமல் அரசனிடம் சென்று கொடுத்தான். அரசனும் மேளத்தை  அசைக்க உள்ளே இருந்த தேனீக்கள்  சத்தத்தினால் தேனீக்கள் இங்கும் அங்கும் பறக்க மேளம் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்ட அரசன்' உன்னால் மட்டும் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது? என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
உழைக்காமல் உண்பவர்களை திருடர்கள் என்று கூறுவார்கள்!
Motivation Image

"அரசே உங்கள் கேள்விகளுக்கு விடைகள் தரும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமாக எனக்கு தங்களின் கேள்விக்குரிய பதில் கிடைத்தது" என்றான்.

இளைஞனின் பதில் அரசனை  நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்னைகளைத் தீர்வு செய்ய வயதானவர் களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து, இனி வயதானவர்களை மலைப்பகுதிக்கு கொண்டு விட வேண்டாம் என உத்தரவு போட்டான்.

அது முதல் பிள்ளைகளுடன், வயதானவர்கள் மகிழ்ச்சியாக கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதை இந்த அனுபவ பாடம் மூலம் அறியலாம். வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே இறைவன் கொடுத்த வரம் என்று உணர்வோம்.

வயதான காலத்தில் பெற்றோர் நம்மோடு இருப்பதும், அவர்களை பராமரிப்பதும் நம் கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com