நேர்மறை வார்த்தைகளின் பலன்கள் என்ன தெரியுமா?

Motivation Image
Motivation Imagepixabay.com

ருவருடைய மோசமான மனநிலையை மாற்றும் சக்தி ஒரே ஒரு நேர்மறையான வார்த்தைக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் ‘முடியாது’, ‘நடக்காது’ போன்ற எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லிவிட முடியும்.

ஆனால் நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவது மிக மிக கடினம். ஏனெனில் ஒருவர் நேர்மறையான வார்த்தைகளைப் பேசினால், ‘நடக்காத காரியத்திற்கு ஏன் வீன் ஆறுதல்’ என்று கூறுவார்கள். ஆறுதல் வார்த்தைகள் ஒருவரின் மனதை சரி செய்யும் என்றால் அந்த விஷயத்தின் முடிவைப் பற்றி நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நாம் காணாத கடவுளிடம் அந்த விஷயம் நடக்குமா, நடக்காதா என்று தெரியாமல் வார்த்தைகள் மூலம் பிரார்த்தனை செய்கிறோம். அதற்கு காரணம் நம்பிக்கை. அதேதான் இங்கும். நடக்காது போன்று எதிர்மறை வார்த்தைகளைக் கூறுவதற்கு பதிலாக அந்த ஒரு சதவீதம் நம்பிக்கையை மனதில் வைத்து நேர்மறை வார்த்தைகளைக் கூறலாம் அல்லவா?

நேர்மறை வார்த்தைகள் என்பது இறந்தவரின் உறவினரிடம், ‘அவர் திரும்பி வருவார், அழாதே’ என்று கூறாமல்; ‘அவர் என்னவெல்லாம் நல்லது செய்திருக்கிறார், நிச்சயம் அவர் ஆத்மா சாந்தி அடைந்துவிடும், அழாதே’ என்று கூறுவதுதான். உண்மையில் இந்த நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நிச்சயம் ஒரு பக்குவம் வேண்டும். நேர்மறை வார்த்தைகளைப் பேசுவது ஒரு கலை என்றும், அந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள் ஒரு கலைஞர் என்று கூறுவது கூட தவறாகாது. ஏனெனில் உடன் இருப்பவர்களின் மனதை நல்ல வார்த்தைகளால் செதுக்குவதும் கலைதானே.

இந்த நேர்மறை வார்த்தைகள் சில சமயம் ஒருவரை ஊக்குவிக்கவும் உதவி செய்கிறது. அதாவது ஒருவரின் ‘முடியாது’ என்ற எண்ணத்தை உங்களின் ‘முடியும், முடியும்’ என்ற வார்த்தைகள், அவரின் செயலையே முடிவடைய செய்யும் அளவிற்கு சக்தி கொண்டது.

நேர்மறை வார்த்தைகளை முதலில் பேச ஆரம்பிக்கும் போது என்ன சொன்னால் அவர்கள் நலமாவார்கள் என்று யோசித்துப் பேசுவது போல்தான் இருக்கும். ஆனால் இதனைப் பழக்கமாக்கிக்கொண்ட பின்னர் மிகவும் எளிதாகிவிடும். அதன் பின் உங்களால் நிச்சயம் நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக்கொண்டு, அதனை மற்றவர்களுக்கும் பரப்ப இயலும்.

ஆம்! எண்ணம் மற்றும் செயல் ஆகியவை ஒரு தொற்றுப்போல் ஆகும். அதாவது நேர்மறை எண்ணங்களும் சரி, எதிர்மறை எண்ணங்களும் சரி சீக்கிரமாகவும் எளிதாகவும் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவும் தன்மையுடையது. இதன் அடிப்படையில் தான் தனிமையில் அழுங்கள், பொது இடங்களில் சிரியுங்கள் என்ற பழமொழியும் தோன்றியது.

எதிர்மறை வார்த்தைகளை உங்கள் எதிரியிடம் கூட சொல்லாதீர்கள். நேர்மறை வார்த்தைகளை உங்கள் எதிரியிடமும் தவிர்த்துவிடாதீர்கள். காரணம், அது ஒருவரின் வாழ்வை மாற்றும் அளவிற்கு ஆற்றல் கொண்டது. அதேபோல் ஒருவரின் வாழ்வை அழிக்கும் அளவிற்கும் சக்தி கொண்டது.

நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள்! உங்களுக்கும் நல்லதே நடக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com