
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் மிகவும் சோம்பேறிகளாக மாறிவருகிறோம். உடல் உழைப்பு என்பதே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. இதனால் நிறைய நோய்கள் நம்மை சுலபமாக தாக்குகிறது. இதை சரிசெய்ய சுறுசுறுப்பாக எந்நேரமும் இருக்க வேண்டியது, உடல் வியர்க்க வேலை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த புத்திசாலியான அரசர் தனக்கு கீழ் மூன்று மந்திரிகளை வழிநடத்திக்கொண்டு வந்தார். அதில் ஒரு மந்திரி மிகவும் சோம்பேறியாக செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டிக் கொண்டிருப்பதை அரசர் கவனிக்கிறார்.
ஒருநாள் அந்த மந்திரிக்கு தலைவலி, கைகால் வலி, காய்ச்சல் என்று வித்தியாசமான நோய் வருகிறது. அதற்கு எந்த சிகிச்சை எடுத்தும் பயனில்லாமல் போகிறது. இதைப் பார்த்த அரசர் அந்த மந்திரியை அரன்மனைக்கு வரச்சொல்லி ஜாடி நிறைய மாத்திரைகளை கொடுத்து, 'இந்த ஜாடியில் உள்ள மாத்திரைகள் காலியாகும்போது நிச்சயமாக உன் வியாதி குணமாகிவிடும். ஆனால், இந்த மாத்திரையை உனக்கு எப்போது வியர்வை வருகிறதோ அப்போதுதான் எடுக்கவேண்டும்' என்று சொல்கிறார்.
இதைக் கேட்ட மந்திரி, ‘எப்போது நமக்கு வியர்க்கும், எப்போது அந்த மாத்திரையை சாப்பிடலாம்’ என்று காத்துக் கொண்டிருக்கிறார். அது குளிர்க்காலம் என்பதால் அவருக்கு வியர்க்கவேயில்லை. அதனால் வேறு வழியேயில்லாமல் அரசவை வேலைகள், வீட்டு வேலைகள், மக்களுக்கு உதவுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
ஒவ்வொரு முறை வியர்க்கும்போதும் அந்த மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்கிறார். இதனால் கொஞ்சம் நாட்களிலேயே அவருடைய வியாதி முற்றிலும் குணமாகிறது. அரசரை பார்த்து நீங்கள் கொடுத்த மாத்திரைக்கு மிகவும் நன்று என்று சொல்லும்போது பதிலுக்கு அரசர் என்ன சொன்னார் தெரியுமா?
'இந்த வியாதி நான் கொடுத்த மாத்திரைகளால் சரியாகவில்லை. நீ செய்த வேலைகளாலேயே குணமானது. ஏனெனில், நான் உனக்கு கொடுத்தது வெறும் இனிப்பு மிட்டாய்கள் மட்டும்தான் என்று கூறினார். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் எந்த நோய் நொடியும் வராது' என்று சொன்னார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, தற்போது உள்ள காலகட்டத்தில் நமக்கு உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இனியாவது உடற்பயிற்சி செய்வது, உடல் வியர்க்க வேலைகள் செய்வது என்று நம் உடலை பேணிக்காப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இதைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.