
சிலர் எந்த வேலையையும் அழகாக செய்வார்கள். நிதானமாக செய்வார்கள். நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். மற்றும் சிலர் சட்டென்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஐந்து நிமிடம் வேலை பார்த்தால் 10 நிமிடம் ஓய்வு என்று எடுத்துக்கொண்டு திருப்தி அடைவார்கள். இது அவரவர் திட்டமிட்டு செயல்படும் வேலை நேரம், இலக்கு, விடாமுயற்சி அனைத்தையும் பொறுத்தது.
அதேபோல் பூஜை அறையில் நீண்ட நேரம் நின்று ஸ்லோகங்கள் செய்து வழிபடுபவர்கள் அதிகம். ஒரே நிமிடத்தில் தீபம் ஏற்றிவிட்டு அதை மட்டும் பார்த்துவிட்டு வருபவர்கள் சிலர். மற்றும் சிலர் ஒரு நிமிடத்தில் ஒரு சுவாமி படத்தை பார்த்துவிட்டு வருவது உண்டு. இப்படி வாழ்க்கையில் அவரவருக்கு தகுந்த மாதிரி இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றபடி அவரவர் வேலைகளையும் பிரார்த்தனையையும் செய்து வருவது கண்கூடு.
என் உறவினர் ஒருவர் எப்பொழுதும் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்வார். குறிப்பிட்ட நேரத்தில் உண்பார். உறங்குவார். வாக்கிங் செல்வார். நண்பர் களுடன் செலவிடுவார். குழந்தைகள், பேர குழந்தைகளுடன் செலவிடுவார். காய்கறி, மளிகை என்று எல்லாவற்றையும் அதே நேரத்தில் முடித்துவிட்டு அமைதி ஆகிவிடுவார். தூக்கம் வரவில்லை என்று புலம்பவே மாட்டார். குறை கூறமாட்டார்.
அவரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் தீவிர தெய்வ பக்தி உடையவராக இருக்கிறீர்கள். ஆனால் ஒரே ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பிரார்த்தனையை முடித்துக் கொள்கிறீர்களே அது எப்படி? என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையை நான் ஓரளவுக்கு நிதானமாக நிம்மதியாக வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆதலால் அதிக நேரம் பிரார்த்தனைக்காக செலவிட வேண்டும் என்று அதற்கான நேரத்தை அதிகம் கடவுள் எனக்கு கொடுக்கவில்லை.
அவரிடம் நின்று எனக்கு அதை கொடு, இதை கொடு நான் இதை தருகிறேன் அதை தருகிறேன் என்று பிரார்த்தனை செய்வதற்கான எந்த நிபந்தனையும் இல்லை. அப்படி எந்த ஒரு வேண்டுதலும் இல்லாத ஒரு நாளில் கடவுள் முன் நின்று திரும்பும் பொழுது அந்த ஒரு நிமிட பக்தியே எனக்கு போதுமானதாகிறது.
அதனால்தான் ஒரு நிமிடத்திற்குள் திரும்பி விடுகிறேன். பிரார்த்தனையில் எந்தவித குறையும் வைப்பதாகவும் மனதிற்குப்படவில்லை என்று கூறினார். அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன்.
அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் சிறப்புடன், செவ்வனே செய்து முடித்தால் எல்லாவற்றிற்கும் நேரம் கிடைக்கும் என்பதோடு, எந்த வேலைக்கும் அதிகமான நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இருக்காது என்பதை. ஆதலால் திட்டமிட்டு செயல்படுவோம்; திண்டாடாமல் வேலைகளை செய்து முடிப்போம்!