
நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ எண்ணும்போது நிம்மதியான வாழ்க்கை கிடைக்கிறது. அதைவிட்டு விட்டு நம்மிடம் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால், இருக்கும் நிம்மதியும் போய்விடும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
அரண்மனையில் பணிபுரியும் சேவகன் ஒருவன் எப்போதும் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த அரசருக்கு அவன் மீது பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் பொறாமை தாங்க முடியாமல் அந்த சேவகனை அழைத்து, ‘பிரம்மாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட வருமானம், நிறைய சேவகர்கள் என்று இத்தனை இருந்தும் எனக்கு நிம்மதியில்லை. நீ மட்டும் எப்படி ஒன்றுமேயில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறாய்?’ என்று அவனிடம் கேட்டார்.
அதற்கு அந்த சேவகன், 'அரசே! என் குடும்பத்தின் தேவைகள் மிகவும் குறைவாகும். மழை, வெயிலில் இருந்து காப்பதற்கு கூரை, உண்பதற்கு போதுமான உணவு, உடுத்திக்கொள்ள நல்ல உடை ஆகியவை இருந்தாலே போதுமானதாகும். அந்த தேவைகள் எனக்கு கிடைக்கும் வருமானத்திலேயே பூர்த்தியாகி விடுகின்றன. அதைத் தவிர எனக்கு பெரிய ஆசைகள் என்று எதுவும் இல்லை. அதனால் நான் நிம்மதியாக இருக்கின்றேன்’ என்று கூறினான்.
அந்த சேவகன் கூறியதை அரசர் அமைச்சரிடம் பகிர்ந்துக்கொண்டார். அதற்கு அமைச்சர், ‘வேண்டுமென்றால் அவனை நம் வருத்தப்படும் ஆண்கள் சங்கத்தில் சேர்த்து விடலாம் மன்னா!’ என்று கூறினார்.
‘அது என்ன வருத்தப்படும் ஆண்கள் சங்கம்?’ என்று வியப்பாக அரசர் கேட்டார். ‘அந்த சேவகனின் வீட்டு வாசலில் 99 பொற்காசுகள் கொண்ட பையை வைத்து விட்டு பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் அரசரே!' என்றார் அமைச்சர். அரசரும் அவ்வாறு செய்வதற்கு உத்தரவிட்டார்.
தன் வீட்டு வாசலில் இருந்த 99 பொற்காசுகள் நிறைந்த பையை அந்த சேவகன் ஒருமுறைக்கு பலமுறை எண்ணிப் பார்த்து சோர்ந்து விட்டான். ‘இந்த பையில் 99 பொற்காசுகள் மட்டுமே இருக்கிறது. இன்னும் ஒரு பொற்காசு எங்கே போயிருக்கும்?’ என்று எண்ணி அவனுடைய மகிழ்ச்சி, கலகலப்பு, சந்தோஷம் ஆகியன கரைந்துப்போனது. இதை அறிந்த அமைச்சர் அரசனிடம், ‘அவன் நம் வருத்தப்படும் ஆண்கள் சங்கத்தில் சேர்ந்து விட்டான் அரசே!’ என்று கூறினார்.
இந்தக் கதையில் சொல்வதுப்போல, நம்முடைய வாழ்வில் அனுபவிக்க எண்ணற்ற விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத்தவறிய ஒன்றிற்காகவே நாமும் ஏங்கி வருந்துகிறோம். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.