லட்சியத்தை அடைய தடையாக இருக்கும் மனநிறைவுச் செயல்கள் (Instant Gratification) எவை தெரியுமா?
பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற ஆசையும் லட்சியமும் இருக்கும். லட்சியம் என்பது நல்ல கல்வி, செல்வம், வாழ்க்கை வளம், ஆரோக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது. அவை தாமதமான மனநிறைவைத் தரும். (Delayed Gratification) அவற்றை அடைய கடின உழைப்பும், முயற்சிகளும், நீண்ட கால காத்திருத்தலும் தேவை. ஆனால் இலக்குகளை நோக்கிய பயணத்தில், சில சமயங்களில் மனம் சோர்வுற்று உடனடி மனநிறைவைத் தரும் செயல்களில் ஈடுபடத் தோன்றும். எப்போதாவது என்றால் மீண்டு வந்துவிடலாம். ஆனால் அவை தொடர்ந்தால் முடிவெடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். இது அதிகப்படியான செலவு, ஆரோக்கியமற்ற உடல், மனம், மற்றும் லட்சியத்தில் இருந்து விலகுதல் போன்ற எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
உடனடி மனநிறைவை தரும் செயல்கள் என்னென்ன?
1. ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து விட்டு அதிக கலோரிகள் கொண்ட துரித உணவுகளை நாடுவது.
2. காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அலாரம் வைத்துவிட்டு, காலையில் அதை அணைத்துவிட்டு தூங்குவது.
3. மறுநாளைய தேர்வுகளுக்கு படிக்காமல் மொபைலை பார்த்து நேரத்தை வீணடிப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது.
4. ஸ்டடி ஹாலிடேசில் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது.
5. உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும் நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி குடிப்பது.
6. மறுநாள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய முக்கியமான பைல் வேலை இருக்கையில், அதை செய்யாமல் கேண்டீன் சென்று பொழுது போக்குவது.
7. பணம் சேர்த்து அல்லது சம்பள உயர்வுக்குப் பின் கார் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாற்றி அதிக வட்டியில் காரை லோனில் வாங்குவது.
8. சிறிது சிறிதாக பணம் சேர்த்து நகை வாங்கலாம் என்று வைத்திருக்கும் பணத்தில், தேவையேயின்றி உடைகள் வாங்குவது.
9. ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க மாத மாதம் பணம் போட்டு வைக்காமல், டூர், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது’.
இதில் ஒன்று இரண்டு பழக்கங்கள் பெரும்பான்மையான மக்களிடம் இருக்கலாம் ஆனால் இவை அனைத்துமே இருந்தால் வாழ்க்கை சிக்கல் தான். இவற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வது எப்படி?
1. நீண்டகால மனநிறைவிற்கும் உடனடி மன நிறைவிற்கு உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் இப்போது உங்களது விருப்பத்தை பூர்த்தி செய்ய முன் வந்தால் உங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்
2. வெட்டி பொழுது போக்கலாம் என்ற எண்ணம் வரும்போது முக்கியமான விஷயத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் படிக்கலாம். அதன்பின்பு நண்பர்களுடன் வெளியே சுற்றப் போகலாம் என்று நினைத்தால் ஆட்டோமேட்டிக்காக படிப்பில் கவனம் செலுத்தி அந்த எண்ணம் போய்விடும்
3. 10 வருட 20 வருட இலக்குகளை சின்னதாக்கி கொள்ளவும். பத்து வருடங்கள் கழித்து அதிக விலை உயர்ந்த கார் வாங்கலாம் என்று நினைப்பை தள்ளி வைத்துவிட்டு ஐந்து வருடங்களில் சாதாரணமான கார் வாங்கலாம் என்று நினைத்து உழைத்தால் உங்கள் இலக்கை விரைவாக அடைவீர்கள்.