‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற சொல் எவ்வளவு வலிமையான சொல் தெரியுமா? அதுமட்டுமல்ல இது வெற்றியின் உச்சத்தைத்தொட ஒரு வலிமையான சொல் என்று கூட சொல்லலாம். ஒருவரை ஊக்கப்படுத்தும் சொல் மட்டுமல்ல அவர் அந்த காரியத்தை செய்து முடிக்கும் வரை அவருக்கு இந்த சொல் உரமாய் இருக்கிறது.
உண்மைதான் மனம் இருந்தால் மார்க்கமுண்டுதான். ஆனால் நாம் எந்த ஒரு காரியத்தையும் மனது வைத்து செய்யவில்லை என்றால் நிச்சயமாக அந்த காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை என்பதற்கு நல்ல உதாரணம் லியோன் ஸ்பிங்ஸ் என்பவர். அவரைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
அமெரிக்கக் கடற்படையில் இளம் அதிகாரியாகப் பணியாற்றிய இவருக்குத் தன் தம்பி மைக்கேல் ஸ்பிங்ஸ்ஸைப் போல ஏன் உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் ஆகக் கூடாது? என்ற எண்ணம் தோன்றியது.
ஆசை தீவிரமானதால் தன் வேலையை ராஜினாமா செய்தார். குத்துச் சண்டைப் பயிற்சியில் இறங்கினார். சில மாதங்களிலேயே நல்ல தேர்ச்சி கண்டார். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான அவர், அப்போதைய உலகக் குத்துச் சண்டை கியூபா வீரர் சிக்ஸ்டோ சோரியாவோடு மோதும் வாய்ப்பும் பெற்றார்.
சிக்ஸ்டோ சோரியா தன்னை எதிர்த்து நின்ற மூன்று புகழ்பெற்ற வீரர்களை நாக்அவுட் மூலம் வென்று முன்னேறியவர். லியோன் ஸ்பிங்ஸ் முதல் சுற்றிலேயே சிக்ஸ்டோவை நாக் அவுட் செய்து ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்றார். பின்பு 1978 ல் முகம்மது அலியுடன் மோதி உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டமும் பெற்றார்.
தம் தம்பியையே முன்னுதாரணமாகக் கொண்டு முயற்சித்து முன்னேறி முகம்மது அலியையும் தோற்கடித்த லியோன் ஸ்பிங்ஸ் “எடுத்ததை முடிக்கும்" இணையற்ற வீரராகத் திகழ்கின்றார். கடற்படை வேலையை உதறிவிட்டுப் புதிய துறையில் சாதித்த இவர் விரும்பாத வேலையைச் செய்பவர்களுக்கு விரும்புவதைச் செய்யுமாறு வழிகாட்டுகிறார்.
இனியாவது உங்களால் இந்த காரியம் செய்து முடித்து விட முடியும் என்ற தன்னம்பிக்கையோடு எந்த காரியத்தையும் செய்யத் தொடங்குங்கள். நிச்சயமாக அதில் நீங்கள் வெற்றி கண்டு விடுவீர்கள். இதற்குப் பெயர்தான் மனம் இருந்தால் மார்க்கமுண்டு.