நாம் எதைக் கற்றுக்கொண்டாலும், எந்த வேலையை செய்தாலும், எந்த இடத்தில் செய்தாலும், யாருக்காக செய்தாலும், அதை ஆத்மார்த்தமாக செய்யவேண்டும். அப்படி செய்யும்பொழுது வாய்ப்புகள் தானாக தேடிவரும். அப்படி தேடிவரும் வாய்ப்புகளை இழக்காமல் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். தயங்கினால் வாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்பும் உண்டு. பிறகு நாம் தேடினாலும் அது நம்மிடம் வராமல் போகும் சூழ்நிலையும் உருவாகலாம்.
ஆதலால் வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதை எதற்காகவும் இழக்காமல் முறைப்படி பயன்படுத்திக் கொண்டால் வாய்ப்புகள் நம்மைத்தேடி வந்த வண்ணமே இருக்கும். நாம் அதைத்தேடி அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. அப்படி குவியும் வாய்ப்புகள்தான் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதைத்தான் நாம் அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறோம்.
ஒரு மேடை நிகழ்ச்சியில் இடையே பாடுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டது. ஆனால் அதற்கான ஆட்களை முன்கூட்டியே அங்கு நியமித்து வைத்திருக்கவில்லை. அப்பொழுது சுமாராக பாடும் ஒரு பெண்ணை அழைத்து அங்கு பாடச் சொன்னார்கள். ஆனால் அவளோ சற்று தயங்கினாள். நான் பாடுவதற்கு பயிற்சி செய்து முன்னேற்பாடாக வரவில்லை. எப்படி பாடுவது என்று சற்று குழப்பம் அடைந்தாள். என்றாலும் உன்னால் முடியும் முடிந்ததை பாடு என்று கூறிவிட்டார்கள். அந்தத் தோழி இதற்கு முன்பாக பயிற்சி செய்து வைத்திருந்த பல்வேறு பாடல்களை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த மேடையில் பாடி அசத்தினாள்.
அவளுக்கே தெரியாது நம்மால் இவ்வளவு பாட முடியும் என்று .அவளுக்கு அன்று அடித்தது அதிர்ஷ்டம். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் அவளைப் பாராட்டி அதற்காக சிறப்பு பரிசுகள் வேறு கொடுத்து அவளை ஊக்குவித்தார்கள். வீட்டிற்கு போகும்பொழுது பல்வேறு பரிசுகளுடன் சென்ற அவளைப் பார்த்து வீட்டினரே வியந்து போயினார். என்ன இன்று உனக்கு அதிர்ஷ்டமா? எப்படி இப்படி பரிசு கிடைத்தது என்று விபரம் கேட்டு பெருமிதம் அடைந்தார்கள். இதனால் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு அவளுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆதலால் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் அதுதான் அதிர்ஷ்டத்தின் பெரும்பங்கு.
வாழ்க்கையில் எப்போதாவது தான் நல்ல சந்தர்ப்பம் வரும்.
வாய்க்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.
அது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
அதிர்ஷ்டம் வந்து கதவை தட்டும்போது திறங்கள்!