அவமானம் தரும் வெகுமானம் என்ன தெரியுமா?

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

"செதுக்கிக்கொள் உன்னை. உளிகளால் அல்ல பட்ட அவமானங்களால். ஏனெனில் உளிகளை விட பட்ட அவமானங்கள் கூர்மையானவை."

எத்தனை உண்மையான மொழி. ஒரு ஆன்மீகக் கூட்டத்தில் அந்த சாதுவிடம் பலரும் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தனர். ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார்.

சாது அவரை அழைத்து "வந்திருந்த அத்தனை பேருமே ஏதாவது ஒரு பிரச்னயோட வந்திருந்தார்கள். நீ மட்டுமே எதுவும் கேட்கவில்லை. இப்படியே என்றும் நிறைவாக இருப்பா" என்று சொல்ல அவர் முகம் சுளிக்க "அடப் போங்க சாமி, நான் எது பேசினாலும் செய்தாலும் அவமானங்கள் மட்டுமே பரிசாகக் கிடைத்திருக்கு. இதனால மனசு நொந்து போயிட்டேன். இங்க நான் ஏதாவது கேட்டு அதனால  அவமானப்படணுமானுதான் அமைதியா இருந்தேன்."

அவரின் வேதனை கண்டு சாது இப்படி கூறினார். "அட ராமா அவமானப்படாத மனிதர்கள் இங்கு யாரும் உண்டா என்ன?  இதோ உனக்கு முன் என்னை வணங்கி தன் பிரச்னைக்கு வழி கேட்ட அந்த பணக்காரர் நேற்று அவர் வீடு வழியே சென்ற என்னைப் பார்த்து "போறான் பாரு சாமி பேரை சொல்லி ஊரை ஏமாத்தறவன்"  என என் காதுபடவே சொல்லி சிரித்தார். அதை நீங்கள் அவமானம் என்பீர்கள். ஆனால் நான் கடவுள் எனக்கு தந்த வெகுமதியாக அதைப் பெற்று இன்று என்னைத் தேடிவந்த பணக்காரருக்கு ஆசிகள் தந்தேன். எதுவும் நிரந்தரமில்லாத இந்த மாய உலகில் அவமானங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும். இந்த வலிகளை சுமந்த உன்னால் இனி வாழ்வின் வெற்றிக்கு நல்ல வழியைக் கண்டடைய முடியும் தயங்காமல் செல் " என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

அவரின் பேச்சால் தன்னம்பிக்கை பெற்ற அந்த மனிதர் தெளிவுடன் விடைபெற்றார்.

உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது உடைந்து போகாத வலிமை பெறலாம். நாம் அனுமதிக்காமல் அவமானங்கள் நம்மை வருத்தப்பட வைப்பதில்லை. நடந்து விட்ட அவமானங்களை சிம்மாசனம் இட்டு மனதிலேயே அமரவைத்து அதற்கு சாமரம் வீசி அதையே நினைத்து நாம் நொந்துபோவது நமக்கு நாமே பறித்துக் கொள்ளும் பள்ளம்.
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி. புத்தர் அமைதி காத்தார். அவமானப்படுத்தியவர்களுக்கே அவமானமாகிவிட்டது.

"என்ன சாமி உங்களுக்கு கோபமே வரவில்லையா?" என்று கேட்டார்கள்.

புத்தர் சிரித்தார்.

“முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள்.  தேவையில்லை எனத் திருப்பித் தந்தேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் இங்கேதான் தந்து விட்டுப் போகப்போகிறேன்" என்றாராம். நம் அனுமதியின்றி நம்மைக் காயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை எனும் உளவியல் உண்மையை உணர்த்தும் புத்தரின் கதைதான் இது.

இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் பேசும். நாம் எப்படி என்பது நாம் மட்டுமே முழுமையாக அறிவோம். நம்மை சிறு பகுதி மட்டுமே அறிந்தவர்கள் தரும் அவமானங்களை குப்பைக்கு சமானமாக தூர வீசி விடுங்கள்.

அவமானங்களை உரமாக்கி வெகுமானமாக வெற்றி பெறுவதிலே மட்டும் நமது கவனத்தை ஒருமுகப்படுத்தி வளமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com