மகிழ்ச்சி நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா?

Motivation Image
Motivation Imagepixabay.com

ப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க அனைவர் மீதும்  அன்பு செலுத்த வேண்டும். இன் சொற்களையே பேச வேண்டும். பணிவன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதனால் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரித்து விடும். இதனுடன் இன்னும் என்னென்ன செய்தால் மகிழ்ச்சி நிலவும் என்பதை இப்பதிவில் காண்போம்! 

நம்மை நாமே அறிந்து கொண்டு நல்ல விஷயங்களில் ஈடுபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களும் நம்மை கூர்ந்து கவனித்து, அதன் நிறை குறைகளை பேச ஆரம்பிப்பார்கள். இரண்டையும் ஒரே  கோணத்தில் பார்த்தால் மனதில் சந்தோசம் நிலவும். அவர்கள் எதிர்மறையாக ஏதாவது கருத்து சொன்னாலும் அதில் நேர்மறையை தங்களுக்குள் தாமே புகுத்துக் கொண்டு முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும். 

தினமும் சில நிமிடம் மூச்சு பயிற்சி செய்யுங்கள். சீராக மூச்சு பயிற்சி செய்தால் மனம் அமைதி அடையும். அதேபோல் தியான பயிற்சி மேற்கொண்டால் உள்ளுணர்வு சொல்வதை அப்படியே பின்பற்றலாம். இதனால் குழப்பம் தீர்ந்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். 

ஒன்றை நன்றே, இன்றே இனிதே செய் என்பார்கள்.  அதற்குத் தகுந்தாற்போல் அவரவருக்கு தெரிந்த வேலையை, கலையை நன்றாக செய்து அதில் புதுமையையும், சாதனையும் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் சந்தோசம் நிலவும். மேலும் செய்கின்ற பொருட்கள் விற்பனைக்கு உரியது என்றால், அதன் மூலம் தனிநபர் வருமானமும் பெருகும். பொருளாதாரம் மேம்படும். இதனால் நம்மாலும் சம்பாதிக்க முடிகிறது என்ற மன திருப்தி ஏற்படும்.

அதிகமாக சிந்தியுங்கள். குறைவாக பேசுங்கள். நீங்கள் பேசுவது வெள்ளியென்றால் பேசாமல் இருப்பது தங்கம். மற்றவர்கள் சொல்லும் அனுபவ பாடங்களை காது கொடுத்து கேட்டாலே, அக்கம் பக்கத்தில் நடக்கும் விஷயங்களை கவனித்தாலே நற்சிந்தனை உருவாகும். அதனை வைத்தே நிறைய விஷயங்களை சாதிக்கலாம். எழுதலாம், வரையலாம், பேசலாம், எல்லாவற்றுக்கும் உபயோகமானதை அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம். 

நல்ல நூல்தான் நல்ல நண்பன், எனவே நல்ல புத்தகங்களைத் தேடி படியுங்கள். இதனால் அறிவாற்றல் வளர்வதுடன், நம் வீட்டில் உள்ள குழந்தைகளும் நம்மை பார்த்து படிக்க நேரத்தை செலவிடும். இதனால் அவர்களுக்கும் நல்ல கல்வி அறிவு கிடைக்கும். பரந்த மனப்பான்மை மேலோங்கும். 

இதையும் படியுங்கள்:
உடல் எடை கூடிக்கிட்டே போகுதா? அப்போ கற்றாழை ஜூஸ் குடிச்சா போதுமே! 
Motivation Image

முதியோர்களுக்கு மரியாதை கொடுத்தால், நமக்கும் வயதாகும்போது நிம்மதியுடன் அதே மரியாதை திரும்பக் கிடைக்கும். மேலும் முதியோர்களுக்கு மரியாதை கிடைக்கும்பொழுது அவர்கள் வாய் திறந்து நம்மை வாழ்த்தினால் அதனால் நம் மனம் சந்தோஷத்தில் மிதக்கும். 

அடுத்தவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். ஏழை எளியோர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள். உற்றார் உறவினர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை நல்ல முறையில், நல்ல மனப்பான்மையுடன், நன்கு செலவு செய்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பது சிறப்பு. இதனால் நமக்கும் திருப்தி. அவர்களும் வளர்ச்சி அடைவார்கள். அப்போது மனதில் வருமே ஒரு மகிழ்ச்சி அதற்கு அளவே கிடையாது. 

நம் மகனோ ,மகளோ, பேரக் குழந்தைகளோ நமக்கு கம்ப்யூட்டர், செல்போன் இயக்க பொறுமையாக கற்றுக் கொடுத்திருந்தால் அதுபோன்ற விஷயங்களை மனம் திறந்து பாராட்டிப் பாருங்கள். அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. அந்த பொறுமைக்கு நாம் தரும் பரிசு இதுபோன்று பாராட்டி பேசுவதுதான். ஆதலால் குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த நற்செயலை செய்தாலும் மனம் திறந்து பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு செலவிடுங்கள். முதல் நாள் இரவே மறுநாள் என்னென்ன பணிகள் என்பதை பட்டியல் இடுங்கள். வெளியே உடுத்திக் கொண்டு போகும் உடைகளை தயாராக எடுத்து வைப்பது, மற்ற எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை தயாராக எடுத்து வைப்பது இவற்றை இரவிலேயே செய்து வைத்து விட்டால் காலை நேரம் இதமாக மாறும். குடும்பத்தினர் சிறிது நேரம் மனம் விட்டு பேசுவதும், உள் விஷயங்களை வெளியில் சொல்லாமல், ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொள்ளாமல் இருந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். 

இயற்கையான சூரிய ஒளி மனநிலையை நேர்மறையாக மாற்றும் சக்தி கொண்டது. இதன் மூலம் மகிழ்ச்சிக்கு காரணமான 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இது நாள் முழுவதும் உங்களை உற்சாகத்தோடு இயங்கச் செய்யும். சிரிப்பு நமக்கு மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோசப்படுத்தும். சிரிப்பதால் இளமை பளிச்சிடும். ஆதலால் சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்வது அவசியம். எப்போதும் இறுகிய முகத்துடன் இருக்கும்போது விலகிச் சென்றவர்கள் கூட சிரித்த முகமாக இருக்கும் போது நம்மை திரும்பிப் பார்த்து பேசுவார்கள். இதை அனுபவத்தின் மூலம் அனைவருமே உணர்த்திருப்போம். 

இதையும் படியுங்கள்:
எடையைக் குறைக்க உதவும் Detox Water வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Motivation Image

தீயவற்றை மறப்பதும், தவறுகளை மன்னிப்பதும் நிம்மதி அளித்திடும் விஷயங்கள். சில சமயங்களில் உறவு ,நட்பு வட்டத்தில் பேச்சு வர்த்தை குறைந்து போகும். இதனால் மனநிலை பாதிக்கப்படும். அது போன்ற நேரங்களில் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு அவர்களை நேரில் சென்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கும். இதனால் உறவு பாலம் அமையும். மீண்டும் நல்லிணக்கம் தொடரும். பிறகு மகிழ்ச்சி மலர கேட்கவா வேண்டும். 

ஆக மனிதர்கள் மத்தியில் கசப்பு, விரிசல், பிரிவு, நிறை குறை, நன்மை தீமை எல்லாமே இருக்கும். அத்தனையும் நிறைந்தது தான் வாழ்க்கை. அதை மாற்றிக்கொள்ள வேண்டுமானால், நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பொறுமையாக கையாள கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி கற்றுக் கொண்டு வித்தியாசமாக செயல்படும் பொழுது விலகி இருந்தவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com