
மனிதருக்குள் ஒருவரிடம் உள்ள ஒரு தனித்துவத்தை பார்த்து நாம் அப்படி இல்லையே என்று ஏக்கம் பெருமூச்சு ஏற்படுவது இயல்பு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அளவுக்கு அதிகமான திறமைகள் ஒரே ஒரு வரிடத்தில் கொட்டிக் கிடப்பதையும் காணமுடிகிறது. சிலர் ஆடுவர். பாடுவர். வரைவர், எழுதுவர், சமைப்பர், கோலம் போடுவர், நன்றாகவும் படிப்பர், நன்றாகவும் சம்பாதிப்பார். இவ்வளவு திறமையும் ஒரே ஆளிடம் இருப்பதையும் காணமுடியும்.
மற்றொருவரிடம் ஒரே ஒரு திறமைதான் இருக்கும். அது அபரிமிதமாக இருக்கும். இன்னும் சிலரிடம் சுமாரான திறமைகள் இருக்கும். அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இன்னும் சிலர் சாதாரணமாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அந்த திறமையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதுதான் எல்லா நேரத்திற்கும் தேவையானது என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் விட்டுவிடும் வேலையையும் சேர்த்து இவர்கள் ஈடுசெய்து பெருந்தன்மையோடு நடந்து கொள்வதால் அப்படி உணர்தல் அவசியம்.
என் தோழிகளில் பலர் ஒவ்வொருவரை பார்க்கும் போதும் ஆகா அவர் அவ்வளவு திறமையாக இருக்கிறாரே, இவர் இவ்வளவு திறமையாக இருக்கிறாரே நாம் அவ்வளவு திறமையாக இல்லையே என்று சிலர் ஆதங்கப்படுவது உண்டு. நம்மால் சம்பாதிக்க முடியவில்லையே என்று சிலர் வெளிப்படுத்தி பேசுவதுண்டு. சிலர் அமைதி காப்பது உண்டு. அப்படி நடந்து கொள்ள வேண்டிய, நினைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் எப்பொழுதும் தேவை இல்லை. அப்படி ஒரு சிந்தனைக்கு இடம் கொடுக்கவும் வேண்டாம்.
காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வரும் பொழுது அவர்களுடைய தனித்திறமை வெளிப்படுவதை நன்றாக காண முடியும். வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் சாதாரணமாகத்தான் இருக்கிறோம் என்பவர்தான் எல்லோரயும் அழைத்து, வரவேற்று உபசரித்து உட்கார வைத்து தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பார். இதுபோல் ஒவ்வொருவரும் அவரவர் நேரம் வரும்போது செய்வதைப் பார்த்தால் இந்தத் தாழ்வு மனப்பான்மை அடியோடு மாறி விடுவதை காணமுடியும்.
இதனால்தான் அப்பொழுது வீடுகளில் நிறைய சின்ன சின்ன விசேஷங்கள் வைத்து உற்சாகமாக உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கம் அழைத்து விருந்து வைத்து சிறப்பித்தார்கள் போலும். இப்படி விசேஷங்கள் வைப்பதால் பல்வேறு விதமான தனித்திறமைகள் மேம்படுவதை காணலாம். உறவுகளுக்குள் பாலம் ஏற்படுவதை உணரலாம். அதன்பிறகு சாதாரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட அப்படி அவர் இல்லை.
அந்த விசேஷத்தில் பார்த்தேன் எப்படி சுறுசுறுப்பாக இயங்கினார். எல்லோரையும் எப்படி இன்முகத்துடன் வரவேற்றார் என்று அவருக்கு ஒரு தனி மரியாதை ஏற்படுவதையும், மற்றவர்கள் கொடுப்பதையும் காணமுடிகிறது. ஆதலால் விசேஷம் எதற்கு என்று யோசிக்க வேண்டாம். அதற்கும் சில நன்மைகள், பல்வேறு பலாபலன்கள், சிறப்புத் தன்மைகள், சுயசிந்தனையின் வெளிப்பாடு, சுயமரியாதை, அனைத்தையும் சேர்த்து அது வெளிப்படுத்துவதை விரிவாக காணமுடிகிறது.
ஆதலால், வாழ்க்கையில் ஒன்றை விட இன்னொன்று சிறந்தது என்று நினைப்பதை விட எல்லாவற்றுக்குமே
ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்து கொண்டு இயல்பாக ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை சிறக்கும்! என்பதை மனதில் கொள்வோமாக!