ஒருவர் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கவும் கூடாது. அதேபோல் எப்போதும் அமைதியாகவும் இருக்க கூடாது. ஏனெனில் சொற்களுக்கு வலிமை அதிகம். இவை ஒரு உறவை சேர்க்கவும் செய்யும். பிரிக்கவும் செய்யும். அதேபோல் அனைத்து இடங்களிலும் அமைதியாக இருந்தால், அதற்கு அவமானம் என்றும் பெயர் உள்ளது. ஆகையால் எந்தெந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என்று தெரிந்தாலே போதும் நம்முடைய மரியாதையையும் சில உறவுகளையும் காப்பாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில், எங்கெங்கு அமைதி காக்க வேண்டும் என பார்ப்போம்.
1. ஒருவர் மீது கோபத்தில் இருக்கும்போது மனதில் தோன்றும் வார்த்தைகளை அவர்கள் மீது திணிக்கத்தான் தோன்றும். அந்த சமையங்களில் வார்த்தைகளை விடுவது எதிரே உள்ளவர்களின் மனதைப் புன்படுத்தும் அல்லது வார்த்தைகள் தொடர தூண்டுகோலாக அமையும். அந்த சமையங்களில் நீங்கள் அமைதியை காப்பதன் மூலமே பேச்சு தொடர்வதை நிறுத்த முடியும்.
2. மிகவும் உணர்வுப் பூர்வமான நேரங்களில் அமைதியைக் காப்பது நல்லது. அதாவது ஒருவர் மீது அதிகமான அன்பு உண்டாகும்போது நீங்கள் நிச்சயம் அமைதி காக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான அன்பை நீங்கள் வார்த்தைகள் வழியாக காட்டும்போது, நம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. அந்த சமையங்களில் உங்களின் அமைதியில் மறைந்திருக்கும் அன்பு புரிதலை நிச்சயம் அதிகரிக்கும்.
3. அதிகப்படியான உணர்வினால் சத்தமாகப் பேசாமல் ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால், பேசாதீர்கள். அந்த நேரங்களில் நீங்கள் சத்தமாகப் பேசுவதால் எதிரே உள்ளவர்கள், அவர்களின் தரப்பை சொல்ல முடியாத நிலை ஏற்படும். அதேபோல் அவர்களின் நிலைமையை நீங்கள் புரிந்துக்கொள்ள மாட்டீர்கள்.
4. முழு விவரமும் தெரியாமல் எதுவும் பேசாதீர்கள். ஒரு பிரச்சனை ஏற்படும்போது முழு விஷயமும் என்னவென்று தெரியாமல் பேசுவது உங்களுக்கு கெட்டப் பெயரையே உண்டாக்கும். அதுவுமில்லாமல் எல்லாம் தெரிந்த பிறகு மன்னிப்புக் கேட்பதால் நடந்த எதுவும் மாறிவிடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
5. அமைதியாக இருப்பதன் மூலம் உறவுகள் உடையாமல் தடுக்கலாம். உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர் யாரும் கோபத்தில் கத்தும்போது நீங்கள் அமைதியை கடைப்பிடித்தால் உறவுகள் நிலைக்கும்.
6. உங்களின் ஒரு சொல் எதிரே உள்ளவர்களை கஷ்டப்படுத்தியது என்றால் அடுத்த சொற்களை விழுங்குவது அவசியம். அல்லது இந்த சொல் அவர்களை கஷ்டப்படுத்தும் என்று தோன்றினாலே அதனை சொல்லாமல் நிறுத்திவிடுவது அவசியம்.
7. ஒருவேளை உங்களின் வார்த்தை நட்பை முறிக்கும் என்றால் அமைதியை கையாள்வது நல்லது. ஏனெனில் நம்மை சுற்றி எப்போதும் இருப்பவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களே. ஆகையால் இருபலங்களையும் தாங்கிப் பிடிக்கும்போது உங்கள் சொல் பலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
அமைதி பல இடங்களில் உங்கள் மதிப்பை உயர்த்த உதவுகிறது. அதனை நினைவில்கொண்டு அமைதியை கடைப்பிடியுங்கள். அதற்காக பேச வேண்டிய இடத்தில் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். அமைதியிலும் பொருமையாக சூழ்நிலையை அறிந்து பேசுவதிலும் அடங்கியுள்ளது உங்களுடைய பொறுப்புணர்வு.