
நம் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நம் மனநிலை முக்கியமான பங்கு வகிக்கிறது. நம் மனநிலையை மாற்றி அமைப்பதன் மூலம் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். எளிமை, தெளிவு, தனிமை ஆகியவை நம் வாழ்வில் ஆற்றலையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. நல்ல மகிழ்ச்சி என்பது பொருட்களை வாங்கி குவிப்பதில் மட்டும் இல்லை. கொஞ்சம் மனசை மாற்றுங்கள். மகிழ்ச்சியும் வெற்றியும் தானாக வந்து சேரும்.
நம் எண்ணமே நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்கிறது. நம்முடைய ஒவ்வொரு கணத்தையும் நாம்தான் தீர்மானிக்கிறோம். நம் மனம் நிம்மதியாக இருக்கும்பொழுது, நம்முடைய கண்ணோட்டம் நேர்மறையாகவும், யதார்த்தமாகவும் இருக்கும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் வலிமை மற்றும் தைரியத்துடன் நம்மை ஆதரிக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். நம் மகிழ்ச்சியை யார் தீர்மானிப்பது? சந்தேகமே இல்லாமல் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
நாம் மிக எளிதாக மனதால் காயப்படக்கூடிய நபராக இருந்தால் நம் மகிழ்ச்சி தொலைந்துதான் போகும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமே மகிழ்ச்சி தொலைகிறது என்று கூறமுடியாது. நம்முடைய எண்ணங்களே கூட நம் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம். எனவே நம்மை பாசிட்டிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளப் பழகவேண்டும்.
நம்முடைய நிறைவேறாத ஆசைகளும் நம் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம். பொருட்களின் மீதான ஆசை, பணத்தின் மீதான ஆசை, பதவியின் மீதான ஆசை என ஆசையை அதிகம் வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் கிடையாது. அத்துடன் நிம்மதியாகவும் வாழ முடியாது. ஆடம்பர வாழ்க்கையில் மட்டுமே மகிழ்ச்சி உள்ளது என்று தவறாக எண்ணி அதனைத்தேடி ஓடி இறுதியில் களைத்துத்தான் போவோம். உண்மையில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். நம் மகிழ்ச்சியை யார் தீர்மானிப்பது? சந்தேகமே இல்லாமல் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்க பல வழிகள் உண்டு. உண்மையில் மகிழ்ச்சி என்பது "வெளியே" இருந்து வருவதில்லை. நம் மனத்தின் உள்ளே மகிழ்ச்சி எழும்பொழுது அதை நம் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் வெளிக்கொண்டு வருகிறோம். ஆகவே மகிழ்ச்சி என்பது நம்முடைய உள்ளத்தின் மகிழ்ச்சியின் வெளிப்பாடே தவிர நாம் செய்யும் செயல்களின் விளைபொருளல்ல. நம் மகிழ்ச்சியின் அளவை நாம் மட்டுமே தீர்மானிக்க முடியும். உண்மையான மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருந்தே தொடங்கும். யாராலும் நம்மை மகிழ்ச்சியடைய செய்ய முடியாது. எந்த விஷயமும் நம்மை மகிழ்ச்சியடைய செய்யாது. உண்மையான வாழ்க்கையை வாழ அன்பான இதயமும், அழகான வாழ்க்கையும் இருந்தால் போதும். மகிழ்ச்சி என்பது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.
பிறரை காயப்படுத்தாத எந்த ஒரு மகிழ்ச்சியும் நம்மால் அனுபவிக்க முடியும். எவ்வித செலவும் இல்லாமல், தேடலும் இல்லாமல் நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை சந்தோஷமுடன் கொண்டாட கற்றுக்கொண்டால் என்றும் மகிழ்ச்சிதான்!
நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!