“The most beautiful people we have known are those who have known defeat, known suffering, known struggle, known loss, and have found their way out of the depths. These persons have an appreciation, a sensitivity, and an understanding of life that fills them with compassion, gentleness, and a deep loving concern. Beautiful people do not just happen".
"நாம் அறிந்த வசீகரமானவர்கள் தோல்வி, துயரம், போராட்டம், இழப்பு இவற்றைச் சந்தித்து, அதிலிருந்து வெளிவர அவரவர் வழிகளைக் கண்டவர்கள். அவர்கள் மதித்தல், கூரறிவு, வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஆகிவற்றால் கருணை, மென்மை, ஆழமாக நேசிக்கும் அக்கறையால் நிரப்பப்பட்டவர்கள். வசீகரமானவர்கள் அப்படியொன்றும் சாதாரணமாக உருவாவதில்லை”- -Elisabeth Kübler-Ross.
எலிசபெத் கோப்ளர்-ரோஸ் ஒரு சுவிஸ்-அமெரிக்க மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளர். மரணத்திற்கு அருகில் உள்ள ஆய்வுகளில் முன்னோடி மற்றும் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகமான ஆன் டெத் அண்ட் டையிங் (1969) எழுதியவர். துக்கத்தின் ஐந்து நிலைகள் பற்றிய அவரது கோட்பாட்டை முதலில் விவாதித்தார், இது "கோப்ளர்-ராஸ் மாதிரி" என்றும் அழைக்கப்படுகிறது. மறைந்தும் அவரின் எழுத்துக்கள் வெற்றிக்கு வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் வெற்றிபெற பலவிதமான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த யுகம் போட்டிகள் நிறைந்த அவசர காலமாக உள்ளது. இந்த போட்டிகளில் ஒருவருடைய வெற்றி மற்றவருக்கு தோல்வியாக அமைகிறது. ஒருவருடைய முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள் அநேகமாக எவரும் இருக்க மாட்டார்கள். தனக்கு உதவி செய்யும் சிறந்த நண்பனாக நமக்கு நாமே செயல்பட வேண்டுமே தவிர தனக்குத் தானே எதிரியாக செயல்படக் கூடாது.
"என்னைத் தவிர யாராலும் எனக்கு தீங்கு செய்ய முடியாது என்னுடைய வெற்றிக்கு நான்தான் பாடுபட வேண்டும்" என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டால் தோல்விகளும் தயங்கி பின்வாங்கும்.
நம்மிடம் இருக்கும் அறிவு திறமை போன்றவைகளை நாமே கண்டுகொண்டு அதற்கு மதிப்பு தராவிட்டால் மற்றவர்கள் யாரும் அவைகளை கட்டாயம் மதிக்கப் போவது கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு அது வேலையும் அல்ல. தன் மேல் நம்பிக்கை இல்லாதவனை அவனுடைய மனைவியை குடும்பத்தார் கூட மதிக்க மாட்டார்கள். தன் மேல் சுயநம்பிக்கை வளர்த்துக் கொண்டவனுடைய அறிவும் திறமையுமே வளர்பிறை போன்று வளர்ந்து வெற்றி என்ற முழுநிலவாக ஜொலிக்கிறது. மற்றவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதன்படி செயல்பட்டு வருவதை பழக்கமாக்கிக் கொண்டவன் வெற்றியின் பாதையில் பயணிக்கவே முடியாது.
வெறும் சட்டங்களைக் கொண்டு ஒருவனை சுறுசுறுப்பு உள்ளவனாக மாற்ற முடியாது. ஏனெனில் குடிப் பழக்கத்தை சட்டங்களினால் தடுத்து நிறுத்த முடிகிறதா? இல்லை. தன் மனம் சொல்வதைதான் ஒருவன் செய்து முடிக்கிறான். தன் மனதுடைய உதவியை கொண்டு ஒருவன் தன்னுடைய கெட்ட பழக்கங்களை அகற்றிவிட முடியும். எனவேதான் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முன்வருபவனுக்கு உதவி செய்ய நிறைய பேர்கள் ஓடி வருவார்கள்.
கோப்ளர் கூறியிருப்பதை திரும்ப ஒரு முறை படியுங்கள். வசீகரமான வெற்றியாளர்கள் சாதாரணமாக உருவாக வில்லை. தங்களுக்கு ஏற்பட்ட பல தோல்விகளை, இழப்புகளை, போராட்டங்களை சந்தித்து தங்கள் அறிவு, கருணை போன்ற குணங்கள் வழியில் தங்களுக்குள் தாங்களே போட்டி போட்டு ஜெயித்தவர்கள்.
நீங்கள் யாருடன் போட்டி போட வேண்டும் தெரியுமா? நம் எதிரிகளுடன் இல்லை. நீங்கள் உங்களுடன்தான் போட்டி போட வேண்டும். உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற ஆசைப்பட்டால் உங்களுக்கு முன்னேற்றத்திற்காக உதவப்போகும் ஒரே மூலதனம் நீங்கள்தான். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து இந்த வினாடியே முன்னேற்றத்திற்கான திட்டம் ஒன்றை தீட்டி அதை உடனடியாக செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
உங்களை நீங்களே நம்பி உங்களுடைய சோம்பலை விரட்டி திறமையை குறைத்து மதிப்பிடும் குணம் ஆகியவற்றை போட்டி போட்டு விலக்கிவிட்டு உங்கள் போட்டியாளராக இருக்கும் மனதை வென்று வெற்றியின் இலக்கை நோக்கி பயணிக்க துவங்குங்கள்.