பெரும்பாலான மக்கள் ஒரு விஷயத்தை காதில் கேட்ட உடனேயே அது உண்மையா அல்லது பொய்யா? என்று எதைப் பற்றியும் பெரிதும் யோசிக்காமல் உடனேயே ரியாக்ட் செய்துவிடுவது நிறைய பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. எந்த விஷயத்தை கேட்டாலும் அதைப்பற்றி சற்று யோசித்து நிதானமாக முடிவெடித்துப் பேசுவது நல்லதாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் ராமு ரோட்டிலே அவனுடைய நண்பர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அப்போது ராமுவின் நண்பர்களில் ஒருவன் புகைப்பிடித்துக்கொண்டு வந்தான். இதைப் பார்த்த ராமுவின் சொந்தக்காரர் ஒருவர் ராமுவின் தந்தையிடம் சென்று, ‘ராமு புகைப்பிடித்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றதாக சொல்லி விடுகிறார்.
அதைக்கேட்ட ராமுவின் அப்பாவிற்கு பயங்கர கோபம். ராமு வீட்டிற்கு வந்ததுமே அவனை பயங்கரமாக திட்டத்தொடங்குகிறார். ராமுவின் தந்தை சொல்கிறார், ‘ஏன்டா! நான் உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். ஆனால், நீயோ குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்துக்கொள்ளாமல் ரோட்டிலே புகைப்பிடித்துக்கொண்டு சுற்றுகிறாயே!' என்று கோபமாக கேட்கிறார். இதைக் கேட்டதும் ராமுவிற்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ஏனெனில், அவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமேயில்லை.
உடனே ராமு என்ன யோசிக்கிறான் என்றால், ‘செய்யாத தவறுக்கு திட்டு வாங்குவதற்கு பதில் ஏன் அந்த தவறை நாம் செய்யக்கூடாது?’ என்று தவறான முடிவை எடுத்துவிடுகிறான். இதற்கு பெயர்தான் ரியாக்டிங் மைன்ட் என்று சொல்வார்கள். ஒரு விஷயத்தை காதில் கேட்டதும் அதைப்பற்றி சிந்திக்காமல் உடனே முடிவெடுப்பது.
இதுவே ராமுவுடைய தந்தை Thinking mind ஆக இருந்திருந்தால் எப்படி பேசியிருப்பார் தெரியுமா? ’தம்பி, இங்கே வா!’ என்று அவனை அழைத்து உட்கார வைத்து, ‘நீ உன் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்பிடிப்பதாக உறவினர் ஒருவர் கூறினார். ஆனால், அதை நான் நம்பவில்லை. ஏனெனில், நான் உன்னை அவ்வாறு வளர்க்கவில்லை. எனினும், தீய பழக்கம் உள்ள நண்பர்களுடன் சேரும் போது இந்த சமூகம் உன்னையும் அவ்வாறே பார்க்கும். இதைப் புரிந்து நடந்துக்கொள்’ என்று பக்குவமாக சொல்லியிருப்பார். இதற்கு பெயர் தான் Thinking mind என்று சொல்வார்கள்.
எப்போதுமே வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கேட்டவுடனேயே ரியாக்ட் செய்வதை நிறுத்திவிட்டு அந்த விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்து நிதானமாக முடிவெடுக்கும்போது எல்லா முடிவுகளும் சரியாகவே அமையும். முயற்சித்துப் பாருங்களேன்.