எந்த வேலையை செய்தாலும் அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. நாம் செய்யும் வேலையில் நம்முடைய முழு திறமையைக் காட்ட வேண்டியது மிகவும் அவசியம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் தச்சர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், இதற்கு மேல் இந்த வேலையை செய்ய முடியாது என்று என்று கூறி தன்னுடைய ஓய்வை அறிவிக்கிறார். இதைக் கேட்ட அவருடைய முதலாளி கொஞ்சம் மன வருத்தத்துடன் என்னுடைய அனுபவத்தில் உங்களை மாதிரி வேலை செய்யும் நபரை நான் பார்த்ததில்லை. எனக்காக உங்கள் ஓய்வுக்கு முன்பு ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டி முடித்துக்கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
இதை கேட்ட அந்த முதியவர் தனக்கு அந்த வேலையை செய்ய விருப்பமில்லை என்றாலும், ‘வேண்டா வெருப்பாக நான் இந்த வேலையை முடித்து தருகிறேன்’ என்று முதலாளியிடம் கூறிவிடுகிறார். அவருடைய கடைசி வேலைக்கு அவருடைய முழுமுயற்சியை கொடுக்காமல், தரமான பொருட்களை பயன்படுத்தாமல் அவசர அவசரமாக அந்த வீட்டை ஒரு ஆறு மாதத்திற்குள் முடித்துக்கொடுக்கிறார்.
இப்போது அந்த முதலாளி அந்த வீட்டின் சாவியை அந்த முதியவரிடமே கொடுத்து, ‘இத்தனை வருடம் என்னிடம் வேலைப் பார்த்ததற்காக என்னுடைய அன்பு பரிசு’ என்று சொல்லிக் கொடுக்கிறார். இதைக்கேட்ட அந்த முதியவர் மிகவும் வருதப்பட்டார், 'எனக்குத்தான் அந்த வீடு என்று தெரிந்திருந்தால், என்னுடைய முழுமுயற்சியையும் கொடுத்திருப்பேன். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருப்பேன்' என்று நினைத்து நொந்துக்கொள்கிறார்.
இதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் நாம் முழுமுயற்சியை போடாமல் கடமைக்கே என்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எல்லா சமயத்திலும் நம்முடைய நூறு சதவீத உழைப்பை போட வேண்டியது மிகவும் அவசியமாகும். கொஞ்சம் முயற்சி செய்து கடுமையாக உழைத்தால், ஒரு அழகான வாழ்க்கையை நமக்காக நாமும் கட்டி முடிக்கலாம். என்ன நான் சொல்வது சரிதானே? முயற்சித்துதான் பாருங்களேன்.