நீங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள் தெரியுமா? 

Do you know why you are sad?
Do you know why you are sad?

யூடியூபில் ரேண்டமாக சில காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, Law Of Attraction சார்ந்த காணொளி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆழமாக நம்புங்கள் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அதை ஏற்படுத்திக் கொடுக்கும் எனக் கூறியிருந்தார்கள். மேலும் ஒரு சில காணொளிகளில் நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களுக்கான விஷயங்கள் தானாக கிடைக்கும் எனக் கூறியிருந்தார்கள். அவற்றை கேட்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. 

நாம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் எப்படி இந்த பிரபஞ்சம் அதை ஏற்படுத்திக் கொடுக்கும்? வாழ்க்கை பலருக்கு கவலையிலேயே முடிந்து விடுகிறது. உண்மை என்னவென்றால் இந்த பிரபஞ்சம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கண்டு கொள்ளாது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான எல்லா விஷயங்களையும் நீங்கள் செய்தால் தான் அது நடக்கும். 

இந்தத் தலைமுறையில் ஏன் பலர் சோகமாகவே இருக்கிறார்கள் என்பதற்கான சில காரணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பிறரோடு ஒப்பிடுதல்: இப்போது அனைத்துமே சோசியல் மீடியா மயமாகிவிட்டது. நாம் என்ன செய்கிறோம் என்பதை சோசியல் மீடியாக்களில் போடவில்லை என்றால் பலருக்கு இங்கே தூக்கம் வருவதில்லை. ஆனால் அதுபோன்ற விஷயங்களை பார்க்கும் மற்றவர்கள், அவர்களோடு தங்களை ஒப்பிட்டுப்பார்த்து கவலை கொள்கிறார்கள். தொடர்ச்சியாக இதேபோன்று நமது வாழ்க்கையை பிறரோடு ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால், மகிழ்ச்சி என்பதே இருக்காது. 

மூளைக்குள்ளே வாழ்வது: சோகமாக இருக்கும் பலர் தங்களின் வாழ்க்கை இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என மூளைக்குள்ளே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் எதுவுமே சாதிக்காமல் இதை சாதித்து விட்டால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்கள். ஆனால் நிஜ வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நடந்திருக்காது. இப்படி அனைத்தையும் தனது மூளைக்குள்ளே நினைத்து, நிகழ்நேரத்தில் எதையும் செய்யவில்லை என்றால் எப்போதும் சோகம்தான்.  

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!
Do you know why you are sad?

மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பது: நம்மில் பலருக்கு வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் தான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சி மட்டுமே கிடைப்பது சாத்தியமல்ல. இன்பம் துன்பம் என அனைத்துமே மாறி மாறி நமக்கு வரத்தான் செய்யும். இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே எல்லா தருணங்களிலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்க முடியும். மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்தால், சோகமான தருணங்களில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருக்கும். 

பெரும்பாலும் ஒருவர் சோகமாக இருப்பதற்கு இந்த மூன்றும் தான் காரணமாக இருக்கும். இதை மீறி பணம், உறவுகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகளும் இருக்கலாம். ஆனால் அவற்றை நினைத்து நாம் கவலை கொள்ளாமல், அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com