இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் மிகவும் அதிகமாகிவிட்டது. அதனால், வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதும் குறைந்துவிட்டது. போட்டிகள் அதிகம் இருந்தால், அதை அடைவதற்கான முயற்சியும் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அலட்சியம் செய்தாலும், நம்முடைய வாய்ப்பு வேறு ஒருவருக்கு சென்றுவிடும். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள இந்தக் கதையை முழுமையாகப் படியுங்கள்.
ஒரு பெட்ரோல் பங்கில் ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். பெட்ரோல் போட இரண்டு பேர், சூப்பர்வைசர், மேனேஜர், இவர்களுக்கு உதவிக்கு ஹெல்பர் ஆகியோர் இருக்கிறார்கள். ஒருநாள் கருப்பு பென்ஸ் கார் அந்த பெட்ரோல் பங்கிற்குள் வருகிறது. பெட்ரோல் போட வேண்டியவர் பெட்ரோலை போடாமல் அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த அந்த கார் ஓனர் வெளியிலே வந்து, 'ஏன் பெட்ரோல் போடாமல் காரையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெட்ரோல் போடும் நபரோ, ‘இந்த கார்தான் என்னுடைய கனவு. என்னுடைய வாழ்க்கையில் எப்படியாவது இந்த காரை வாங்கிவிட வேண்டும் என்பது தான் என் லட்சியம். அதான் இந்த காரைப் பார்த்ததும் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டுவிட்டது’ என்று கூறினார்.
பெட்ரோல் போட்டு முடித்ததும் அந்த கார் வைத்திருக்கும் நபர் ஒரு கார்டை பெட்ரோல் போட்ட நபரிடம் கொடுத்து, ‘இந்த கார்டை எடுத்துக்கொண்டு என் ஆபிஸூக்கு வந்து என்னைப் பார். பிஸ்னஸ் எப்படி செய்ய வேண்டும் என்பதை நான் உனக்கு சொல்லி தருகிறேன்’ என்று கூறிவிட்டு செல்கிறார்.
பெட்ரோல் போட்ட நபர் அந்த கார்டை கையிலே வைத்துக்கொண்டு ரொம்ப நேரம் யோசிக்கிறார். 'பிஸினஸ் நமக்கு சரி வராது?' என்று முடிவெடுத்து அந்த கார்டை கீழே தூக்கிப் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.
சரியாக 5 வருடம் கழித்து அதே பெட்ரோஸ் பங்கிற்கு ஒரு கருப்பு கலர் பென்ஸ் கார் வருகிறது. அந்த கார் ஓனர், ‘என்னப்பா! பெட்ரோல் போடாமல் காரையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்’ என்றுக் கேட்க அதே பதிலை அந்த நபர் மறுபடியும் சொல்கிறார்.
உடனே அந்த கார் ஓனர், 'என்னை உங்களுக்கு நியாபகம் இல்லையா? சரியாக ஐந்து வருடத்திற்கு முன்பு இதே பெட்ரோல் பங்கில் உங்கள் எல்லோருக்கும் ஹெல்பர் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பிஸினஸ் செய்யும் ஒருவர் உன்னிடம் ஒரு கார்ட் கொடுப்பதை நான் பார்த்தேன். நீங்கள் அந்த கார்டை தூக்கி கீழே போட்டுவிட்டீர்கள். நான் அந்த கார்டை பயன்படுத்திக் கொண்டேன்' என்று கூறினார்.
இதேமாதிரிதான் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால், 'இதெல்லாம் நமக்கு செட்டாகுமா?' என்ற பயத்திலேயே எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டு விடுகிறோம். இனி அவ்வாறு செய்யாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே புத்திசாலித்தனமாகும்.