நீங்கள் கோபப்பட்டால் அதை வெகுக்காலம் மனதில் வைத்திருக்கும் நபரா அல்லது உடனுக்குடன் அதை மறந்துவிடும் நபரா? கோபத்தை அடுத்த நொடியே மறந்துவிட்டால், அது அத்துடன் முடிந்துவிடும். இதுவே வெகுக்காலம் மனதில் அதை சுமக்கும்போது வெறுப்பு, குரோதம் போன்ற தீய எண்ணங்கள் நம் மனதில் மேலோங்கிவிடும். எனவே, ஒருவர் தவறு செய்துவிட்டாலும், அதற்கு நீங்கள் கோபப்பட்டாலும் ‘மன்னிப்பு’ என்னும் அருமருந்தை பயன்படுத்த மறக்காதீர்கள். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒருவர் ஆடு வளர்ந்து வந்தார். ஒருநாள் அவர் வளர்த்த ஆடு காணாமல் போய்விட்டது. அவரும் பல இடங்களில் தேடுகிறார். ஆனால், ஆடு கிடைக்கவில்லை. ஆட்டை வளர்த்தவருக்கு நம்முடைய ஆடு காணாமல் போய்விட்டதே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், நம்முடைய ஆட்டை இந்த ஊரில் யார் இவ்வளவு தைரியமாக திருடியது என்று கோபம் ஒருபக்கம் இருந்தது. இப்படியே நாட்கள் நகர்ந்து சென்று கொண்டிருக்க, ஒருநாள் அவர் முன்பு ஒரு தேவதை தோன்றியது.
அது அந்த நபருக்கு ஒரு வரம் தருவதாக கூறியது. ஒன்று உன்னுடைய ஆட்டை கண்டுப்பிடித்து தருகிறேன் என்றும் இல்லையென்றால் உன்னுடைய ஆட்டை திருடிய நபரை கண்டுப்பிடித்து தருகிறேன். ‘இது இரண்டில் உனக்கு எது வேண்டும்?’ என்று கேட்கிறது.
இப்போது அந்த ஆட்டுக்காரர் என்ன கேட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? தொலைந்து போன ஆட்டையா? இல்லை திருடிய நபரையா? ஆட்டை கேட்டிருந்தால் அழகாக கையில் ஆடு கிடைத்திருக்குமே என்று தோன்றுகிறதா?
அந்த ஆட்டுக்காரர் தேவதையிடம், ‘யார் என்னுடைய ஆட்டை திருடியதோ அவர் என் கண் முன்னாடி வர வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்கிறார். அடுத்த நொடி அவர் கண் முன் வந்து நின்றது ஒரு பெரிய புலி. அந்த ஆட்டுக்காரரின் ஆட்டை மனிதர்கள் யாரும் திருடவில்லை. ஒரு புலிதான் வந்து இழுத்துச் சென்றுள்ளது. புலி முன்னாடி வந்து நின்றதும் அந்த ஆட்டுக்காரரின் நிலை என்னவாகியிருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
இதற்காக தான் சொல்வார்கள் நமக்கு வரும் கோபம் நியாயமான கோபமாக இருந்தாலும் கூட ஒரு நிமிடம் அதை காட்டிவிட்டு விட்டுவிட வேண்டும். தேவையில்லாமல் மனதில் சுமக்கக்கூடாது. மனதில் கோபத்தை வெகுக்காலம் சுமப்பது நம்மை சுற்றியுள்ளவரை மட்டுமில்லை நம்மையுமே சேர்த்து பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதை புரிந்துக் கொண்டு செயலாற்றினால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம். முயற்சித்து தான் பாருங்களேன்.