
வெற்றிக்கனியை சுவைக்கும் முன் தோல்வி எனும் பல காய்களை ருசிக்க நேரலாம். வாழ்வில் தோல்வி என்பது முக்கியம். அது வெற்றிக்கான முதல் படி. வாழ்க்கையில் தோற்றுப் போகும்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் எவை என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. தோல்வி கற்றுத் தரும் முதல் பாடம் அனுபவம். வாழ்வில் ஏதாவது ஒரு விஷயத்தில் நாம் தோற்று விட்டால் இன்னும் ஆழமாக நாம் வாழ்க்கையை புரிந்து கொள்வோம். தோல்வி என்கிற விலை கொடுத்து அனுபவம் என்கிற பாடம் கற்கிறோம். அதனால் தோற்றதை பற்றி கவலைப்படாமல் இருங்கள்.
2. தோல்வி தருகிற அறிவை வேறு எதுவுமே தருவதில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் பத்தாயிரம் தடவை தோற்றுப் போய் தான் எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடித்தார். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் அவர் புதிய விஷயத்தை அவர் தெரிந்து கொண்டார். தோல்வி தரும் அறிவை மனதில் சேமித்து வைக்க வேண்டும்.
3. உங்கள் முயற்சியில் தோற்றப் போகும்போது சிலர் ‘’ நான் முன்னாடியே சொன்னேன்ல வேண்டாம்னு. என் பேச்சை நீ கேட்டு இருக்கலாம்’’ என்று சொல்பவர்களை புறந்தள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.
4. தோல்வியை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். முயற்சியில் தோற்று விடும்போது பரவாயில்லை இது சகஜம் தான் என்ற மனநிலை வர வேண்டும். வெற்றி பெற்ற பல மனிதர்களின் பின்னால் தோல்விக் கதைகள் ஏராளமாக இருக்கும். தோற்றுப் போவது பெரிதல்ல. அதில் இருந்து எழாமல் இருப்பது தான் தவறு.
5. ஒரு பேப்பரில் எதில் தோற்றீர்கள், எதனால் தோற்றீர்கள், தோல்விக்கான காரணம் என்ன? இனி அந்தத் தோல்வியை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? தோல்வியில் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்? என்பதை தெளிவாக எழுதுங்கள்
6. உங்களுடைய இலக்கை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இலக்கு நிச்சயமானதா ? தெளிவாக இருக்கிறதா ? அதில் உறுதியாக உள்ளீர்களா? அதை அடைவதற்கான ஸ்மார்ட்டான வழிகள் இருக்கிறதா? சில சமயம் இலக்கில்லாத பயணத்தில் தோல்விகள் வரக்கூடும். உங்களது இலக்கு மிகத் தெளிவாகவும் சுருக்கமாக இருக்க வேண்டும்
7. ஒரு பெரிய செயல் திட்டத்தை உருவாக்குங்கள். லட்சியத்துக்கு ஏற்றவாறு திட்டங்களை வடிவமைக்க வேண்டும். திட்டங்கள் தெளிவாக இருந்தால் இலட்சியத்தை அடைவதற்கான பாதை சுலபமாக இருக்கும்.