மகிழ்ச்சி வேண்டுமா...இத படியுங்க... தென்கச்சி சுவாமிநாதன் பகிர்வு!

மகிழ்ச்சி வேண்டுமா...இத படியுங்க...
தென்கச்சி சுவாமிநாதன் பகிர்வு!

     ந்த இடத்தில் ஒரு தொழில் சம்பந்தமான மீட்டிங் நடைபெற்று வந்தது. மைக்கைப் பிடித்தவர் தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் எதிரில் இருப்பவர்களின் மண்டைக்குள் புகுத்த மிகுந்த சிரத்தையுடன் களமாடி சாரி உரையாடிக்கொண்டு இருந்தார். அமர்ந்திருந்த அனைவருக்கும் கண்கள் சொருகி இன்னும் சற்று நேரத்தில் நித்ரா தேவியின் அரவணைப்புக்குள் செல்லும் அபாயம்... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிலமையைப் புரிந்துகொண்டார்.

     டக்கென்று எழுந்தார். ”ஆகவே எனது அன்பானவர்களே... இவர் இவ்வளவு நேரம் என்ன சொன்னார் என்பதைவிட இனி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கவனியுங்கள். காரணம் இன்னும் இவர் பேசவே தூங்கவில்லை.  அடடா துவங்க வில்லை. சாரி. டங் ஸ்லிப் ஆச்சு.” அவரின் உடல் மொழியும் சிரித்தபடி அவர் சொன்ன விதமும் அங்கு சிரிப்பலைகளை உருவாக்கி சோர்வை விரட்டி உற்சாகத்தையும் தந்தது. பேசியவரும் தனது தவறை உணர்ந்து கலகலவென்று பேச, அதைக் களிப்புடன் கவனித்துப் பலன் பெற்றனர் அங்கிருந்தவர்களும்.

    சிரித்தால் ஆயுள் கூடும் என்று சும்மா சொல்லவில்லை பெரியோர். சிரிக்கும்போது நம் உடலில் நிகழும் நன்மை தரும் ரசாயன மாற்றங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளைக் கூட்டும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒவ்வொரு காலத்திலும் நகைச்சுவையை அள்ளித் தெளித்து நம் மனங்களை ஆட்சி செய்பவர்கள் உள்ளனர். அவர்களில் மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவை உண்மையில் மனதை லேசாக மாற்றும் அற்புதத்தை செய்யும். இதோ அவரின் நகைச்சுவை சிந்தனைத் துளி...

 தென்கச்சி கோ. சுவாமிநாதனின் சிந்தனைகள்...!

 “இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க? "

 " ஐந்து வருஷமா இருக்கேங்க!"

 “ நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள்கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை."

“தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும்,  மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோ சைக்யட்ரிக்'  நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"

 “என்ன சார் சொல்றாங்க?"

 "மனுஷன்புன்னகைக்கும்போது, சிரிக்கும்போது, மகிழ்ச்சிகரமா இருக்கும்போது, அது, உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம். இப்படிப்பட்டவங்கதான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல... பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துலகூட பதட்டப்படக் கூடாது சார்."

 "அடேங்கப்பா... இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதாலதான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்கபோல.”

 "ஆமாங்க."

 "ஆனா உங்ககிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்."

 "ஏன் அப்படி சொல்றீங்க?"

 "இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்...”

 "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்துதான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியிலதான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!" 

"எது... பிரேக்கா?”

 "இல்ல...டிரைவர்...”

 என்ன படிச்சீங்களா? ‘பக்’குன்னு சிரிப்பு வந்திருந்தால் நீங்களே மகிழ்ச்சியானவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com