நாம் ஒருவரிடம் வெகுநாட்கள் பழகினால் அவர்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைப்போம். ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவர்களின் அனைத்துப் பக்கங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை எப்படித் தெரிந்துக்கொள்வது என்ற சந்தேகம் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த தொகுப்பு.
ஒருவரைப் முழுமையாக புரிந்துக்கொள்வதற்கு எவ்வளவு நேரம் பழகுகிறோம் என்பது கணக்கில்லை. எப்படி பழகுகிறோம் என்பதுதான் கணக்கு. ஒருவரை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் நீங்கள் இந்த முறைகள் மூலம் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அவர்களுடன் பயணம் செய்யுங்கள்:
நாம் ஒருவருடன் பயணம் செய்யும்போது பொன்னான வாய்ப்புகளும் நேரங்களும் அமையும். அதாவது அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். அதேபோல் அவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது, எந்த நேரத்தில் எப்படி நடந்துக்கொள்வார்கள், எப்படி ஒருவரிடம் பழகுகிறார்கள் என்பனவற்றை நன்றாக தெரிந்துக்கொள்ளலாம். பயணத்தின் போதுதான் ஒரு மனிதனின் உண்மை முகம் வெளிப்படுமாம். ஒருவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள உண்மை முகம் ஒன்றே போதுமே.
பணத்தின் பயன்பாடு:
ஒரு சிறப்பான உறவில் என்றும் பணப்பிரச்சனையே வந்திருக்காது. ஒரு நல்ல நண்பன் கொடுத்தப் பணத்தை திருப்பி கேட்கமாட்டான். அதேபோல் ஒரு நல்ல நண்பன் உங்களுக்கு பணத் தேவை வரும்போது முதல் ஆழாக வந்து நிற்பான். உறவு சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கும், ஆனால் திடீரென்று பணம் வந்து அந்த உறவையே நாசம் செய்துவிடும். உறவில் அந்த மனிதனை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த உறவு நிச்சயம் தொடராது. அதேபோல் பணத்தை வைத்து உங்களை அவர் ஏமாற்றியதாக நினைக்க வேண்டாம். அவரின் உண்மை குணம் வெளிவந்தது என்று நினைத்து சந்தோசப்படுங்கள்.
கோபத்தின் விளைவுகள்:
அதாவது ஒருவரைப் பற்றி நீங்கள் முழுவதுமாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால் முதல் அவர் கோபம் கொள்ளும்போது அருகில் இருந்து பாருங்கள். ஆம்! ஒருவர் கோபம் கொள்கையில் அவரை நீங்கள் சமாதானப் படுத்தும்போது உங்களை அவர் எப்படி பாவிக்கிறார் என்பதைப் பாருங்கள். ஏனெனில் கோபம் எப்போதும் மனதில் பூட்டி வைத்த உண்மைகளை வெளிபடுத்தும். அதேபோல் உங்களுக்குள் சண்டை வரும்போது கோபத்தினால் இருவரும் பிரிகிறார்களா அல்லது சிறிது நேரத்தில் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைகிறீர்களா என்பதையும் கவனியுங்கள்.
அவர்களுடன் வாழ வேண்டும்:
வாழ வேண்டுமென்றால் முழு நேரமும் அவருடன் செலவிட வேண்டுமென்பதல்ல. அவர்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். குடும்பாத்தாருடன் சுதந்திரமாக பேச வேண்டும். அவரின் வேலையை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, யாருடன் அதிகம் நேரம் செலவிடுகிறார், யாரிடம் அதிகம் தனது தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறார், எங்கெல்லாம் செல்கிறார், எது அவருக்கு அமைதியை கொடுக்கிறது போன்றவற்றை அவருடன் இருந்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவருடன் வாழ்வது என்பது அவரைப்பற்றி நாம் கேட்டவற்றை அனுபவமாக புரிந்துக்கொள்வதுதான்.
இந்த நான்கு விஷயங்களைப் படிப்படியாக செய்தீர்கள் என்றால், அவரைப் பற்றி நிச்சயம் நீங்கள் நன்றாகத் தெரிந்துக்கொள்ளலாம்.