இந்த உலகில் நிறைய பேர் கஷ்டமே படாமல் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுலபமாக பணம் சம்பாதிப்பது இப்போது வேண்டுமானால் எளிமையாக இருந்தாலும், அதனால் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒரு அழகான காட்டில் ஒரு அழகான பறவை அந்த காட்டில் சுற்றிப் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மனிதன் கைகள் நிறைய புழுக்களை எடுத்துக்கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பறவை அந்த மனிதனிடம் சென்று, ‘இந்த புழுக்களையெல்லாம் எங்கு எடுத்துச்செல்கிறாய்’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதனோ, ‘இந்த புழுக்களையெல்லாம் எடுத்துச்சென்று சந்தையில் கொடுத்து பதிலுக்கு ஒரு பறவையின் இறகை வாங்கப்போகிறேன்’ என்று சொன்னான்.
இதைக்கேட்ட அந்த பறவை, 'நான் தினமும் என்னுடைய இறகு ஒன்றை தருகிறேன். நீ தினமும் எனக்கு இதுபோல புழுக்களை எடுத்துவந்துக் கொடு' என்று சொல்லி ஒரு ஒப்பந்தம் போடுகிறது. அதற்கு அந்த மனிதனும் சரி என்று கூறுகிறான்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது போலவே அந்த பறவை தினமும் தன்னுடைய ஒரு இறகைக் கொடுத்து தனக்கு தேவையான உணவை அந்த மனிதனிடமிருந்து வாங்கிக்கொள்கிறது. எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த ஒருநாள் வரும்வரை.
தினமும் அந்த பறவை அவ்வொரு இறகுகளை கொடுத்துக் கொடுத்து இப்போது அந்த பறவையிடம் கொடுக்க இறகேயில்லாமல் போனது. இதைப் பார்த்த அந்த மனிதன் அந்த பறவைக்கு புழுக்களையும் கொடுப்பதில்லை. இப்போது அந்த பறவையால் பறந்து சென்றும் உணவை தேடமுடியவில்லை. இதனால், பசிலேயே அந்த பறவை இறந்துப் போகிறது.
இதேபோல்தான் நாமும் நம் வாழ்வில் பணம் சம்பாதிக்க சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நாளிலேயே அந்த பறவையைப்போல கஷ்டப்பட வேண்டிவரும். எனவே, சுலபமான வழியை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு சரியான வழியைத் தேர்ந்தெடுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். முயற்சித்து தான் பாருங்களேன்.