
ம்ம்...! அவனும் நானும் ஒன்றாக படித்து "டாப்" மார்க் வாங்கி வெவ்வேறு வேலைகளில் சேர்ந்தோம். அவன்கிட்ட 2 BMW கார், பங்களா எல்லாம் இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இல்லை? கடவுளே! எனக்கும் நீங்கள் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்குமே! புலம்பினான் ராம்.
கமலாவும் நானும் நிறைய படித்து முதுநிலைப் பட்டம் பெற்றோம். அவள் மேற்கொண்டு IAS படித்து கலெக்டராக பந்தாவாக இருக்கிறாள். திருமணம் வேண்டாம் என்று தைரியமாக கூறியவள். நானோ படித்திருந்தும், வாயில்லாபூச்சியாய், திருமண பந்தத்தில் ஈடுபட்டு அடுப்படியில் உழல்கிறேன். கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படி..? குறைப்பட்டாள் சகுந்தலா.
இது இருந்தால் நன்றாக இருக்குமே! அது கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று ராமையும், சகுந்தலாவையும் போல புலம்புபவர்கள், குறைப்படுபவர்கள், நினைப்பவர்கள் இப்படி பல பேர்கள். ஆனால், நம்மிடம் இருக்கும் இதர சிறப்புகளைப் பற்றியோ, பொருட்களைப் பற்றியோ, அறியாமல் எதை எதையோ தேடுகிறோம். மேலும் பிறரையும், கடவுளையும் குறை கூறுகிறோம்.
செல்வாக்கு, பணம், புகழ் கிடைத்தால் அதிகமாக மகிழ்ச்சியடையலாம் என தெரிந்தவர் ஒருவர் கூறினார்.
நிம்மதி இல்லாத வாழ்க்கையும் அத்துடன் சேர்ந்தே அமையும் என்பதை உணராதவர் அவர்.
கடவுள் கொடுக்காத ஒன்றைப் பற்றி கவலைப்படுவது சரியில்லை. ஒருவேளை நாம் கேட்பதை,
(அது பணம், பதவி, சொத்து, சொந்தம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) கடவுள் கொடுத்திருந்தால், நமது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.
சிலர் சொல்வதுண்டு "தனியாக இருக்கிறாள்", "தனியாக இருக்கிறான்", யாரும் இல்லை என்று." ஒருவேளை நிறைய பேர்கள் இருந்தால், தனியாக இருந்து, திறமையாக செயல்படுபவரை முன்னேறவிடாமல், தடை செய்தால் எப்படி இருக்கும்.? சற்றே நினைத்துப்பாருங்கள்.
எனவே சில நேரத்தில் பலர், கூட இல்லாமல் இருப்பதுவும் நன்மைக்கே என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம் இருக்கும். நாம் இப்போது அனுபவிக்கும் சிறிய வலிகளுக்கு பின்னால், கடவுள் நம்மால் தாங்க முடியாத பெரிய வலிகளைக் மறைத்துக்கூட வைக்கலாம்.
பல்வேறு குறைபாடுகளுடன் இருப்பவர்களின் நிலைமையைப் பற்றி சிந்திக்கையில், அவ்வாறு இன்றி நம்மை படைத்த கடவுளை நிந்திக்காமல், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு, இருப்பதை வைத்துச் சிறப்போடு வாழக் கற்றுக்கொள்வோம்.
நாம் வாழுகின்ற வாழ்க்கையும் சிறப்பான வாழ்க்கைதான் என்பதை குறைப்பட்டுக்கொள்ளாமல் உணர்ந்தால், அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை.