ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம், அது நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத பயங்கரமான விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது மிகவும் எளிதானதுபோல் தோன்றும். தற்கொலை செய்து கொள்வது தங்களின் வலியை நிறுத்தி, துன்பத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அமைதியை அடையும் வழி என பலர் நினைக்கின்றனர்.
உதாரணத்திற்கு என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், சரியாக 2019 ஆம் ஆண்டு நான் எனது பணியை விட்டு வெளியேறி, இணையத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு டிஜிட்டல் துறைக்குள் நுழைந்தேன். அதுவரை, ஏதாவது பணிக்கு சென்று பணம் சம்பாதித்தால் போதும் என்ற ஒரு சராசரி மனநிலையில் இருந்த நான் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் இதுவாகும். எனக்கு அந்தத் துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தொடக்கத்தில் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்தேன். வீடியோ போடுவோம், பார்வையாளர்கள் குவிவார்கள், லட்ச லட்சமாக சம்பாதிக்கப் போகிறோம் என்ற என்ற சிந்தனை மனதிற்குள் குஷியை ஏற்படுத்தியது.
நான் இணையத்தில் சாதிக்கும் விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும் என நினைத்தேன். அப்போது யூடியூபில் நான் போடும் காணொளிகளுக்கு வரும் கமெண்ட்களில் சிலர் புகழ்ந்து பேசும்போது பேரின்பத்தை அனுபவித்தேன். ஆனால் இது எதுவும் எனக்கு நீண்ட காலம் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னுடைய வேட்கை நீர்த்துப்போனது. வாழ்க்கையில் வெறுமையை உணர ஆரம்பித்தேன்.
அதாவது இயற்கையாய் நமக்கு மகிழ்ச்சி கிடைக்காதபோது நம்மில் பெரும்பாலானவர்கள் செயற்கை மகிழ்ச்சியை தேடிச் செல்வார்கள். மதுப்பழக்கம், போதை பொருட்களை நாடி செல்வார்கள். ஆனால் எனக்கு அதிலெல்லாம் விருப்பமின்றி இனி யூடியூப் பக்கம் செல்ல வேண்டாம் என அனைத்தையும் நிறுத்திவிட்டேன். வாழ்க்கையில் என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை.
அப்போது சமூக வலைதளங்களில் உலா வரும்போது அதில் காணும் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பது போல் எனக்குத் தெரிந்தது. அவர்களோடு என் வாழ்க்கையை ஒப்பீடு செய்து என்னையே வெறுக்க ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை நான் பல காலத்தை வீணடித்ததுபோல் உணர்ந்தேன். நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் முன்னேறுகிறார்கள் நாம் ஒரே இடத்தில் அப்படியே இருக்கிறோம் என்ற சிந்தனை என்னை வாட்டி எடுத்தது.
அச்சமயத்தில் பல தேவையில்லாத எண்ணங்களும் எனக்கு வந்துள்ளது. ஏனென்றால் இச்சமூகத்தில் ஒரு ஆண்மகன் தன்னை கட்டாயம் நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறான். அவன் அவ்வாறு செய்யாதபோது, அவன் வாழ்வில் நடக்க வேண்டிய, கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அவனை விட்டு போய்விடுகிறது.
நான் ஒரு கடினமான சூழலில் இருந்தபோது எனது நெருங்கிய நண்பனின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு என்னைப் பார்த்த பள்ளி பருவ நண்பன் ஒருவன் "நீ உன்னுடைய கனவு வாழ்க்கையை வாழ்கிறாய். நாங்கள்தான் ஏதோ ஒரு சக்கரத்தில் மாட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறோம்" என்றான். அவன் கூறிய வரிகள் எனக்கு மிகப்பெரிய தெளிவை ஏற்படுத்தியது.
நாம் ஏன் தேவையில்லாமல் தற்போது கவலை கொண்டிருக்கிறோம்?. இதுவரை நாம் செய்த செயல்களும் முயற்சிகளும் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் அனைத்திற்கும் பயந்து கொண்டிருந்த நான் தற்போது தைரியமாக பேசும் மனோபாவத்தை ஏற்படுத்தியதே யூடியூப் தான். இதனால் பல மாற்றங்கள் நமது வாழ்க்கையில் நடந்துள்ளது. நம்மால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக முயற்சித்த விஷயங்கள் தவறு என்றாகிவிடாது என்பதை சிந்திக்கத் தொடங்கினேன். அதிலிருந்து வாழ்க்கையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நாம் நம்முடைய வேலையை சரியாக செய்வோம். நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை எல்லா தருணங்களிலும் என்னை நிலையாய் வைத்திருக்க உதவியது.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மன அழுத்த சூழ்நிலை வந்தாலும் அதிலிருந்து வெளிவரும் வாய்ப்பு நமக்கு கட்டாயம் இருக்கும். உண்மையை சொல்லப்போனால் எதுவுமே நமது வாழ்வில் ஒரு முடிவைக் கொண்டு வரப்போவதில்லை. நாம் முடிவாக நினைக்கும் ஒரு விஷயம் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாக அமைகிறது. எனவே தற்கொலை செய்து கொண்டால் எல்லாம் முடிந்துவிடும் என நினைக்காதீர்கள். நீங்கள் தான் இல்லாமல் போவீர்களே தவிர இந்த உலகம் ஒருபோதும் தன்னை மாற்றிக் கொள்ளாது.
தைரியமானவர்களும், போராட்ட குணம் கொண்டவர்களும், வாழ்க்கையில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், தன் கணவன், மனைவி, குழந்தை, பெற்றோருக்காக கடினமாக உழைப்பவர்களும் இருக்கும் வரையில் இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். At Least இப்போது தற்கொலை வேண்டாமே.
வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060 தொடர்புகொள்ளமுடியும்.