
பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்கள் பிறரால் வெறுக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
உதாரணமாக நான் சிறு வயதிலிருந்தே மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என வைத்துக்கொள்வோம். இதுவரை நான் ஆசைப்பட்ட எதுவும் எனக்கு கிடைத்ததே கிடையாது. பெரும்பாலான விஷயங்களுக்கு ஏங்கி ஏங்கியே என்னுடைய நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
அப்படி இருக்கும் சூழலில், என் முன்னே ஒருவர் பல வளங்களை எளிமையாகப் பெற்று. அசாதாரணமாக உலா வரும்போது, நிச்சயம் ஏதோ ஒரு ஓரத்தில் சிறு பொறாமையும், ஏக்கமும் என்னிடமிருந்து மேலிடும். அவர்களைப்போல் நம்மால் இருக்க முடியவில்லையே என்ற குறுகிய மனப்பான்மை வாட்டி வதைக்கும். இது போன்ற எண்ணம், நம் எதிரில் இருப்பவரை அந்நியமாக பார்க்க வைத்துவிடும்.
எனவே, நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அவ்விடத்தில் இருக்கும் மனிதர்களுக்கு நிகரான குணத்தோடு ஒத்திசய முயலுங்கள்.
மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றால், கண்ணம்மா அக்காவிடம் "excuse me, அந்த Carrot என்ன rate" என்று கேட்பதற்கு பதிலாக, "முனிம்மாக்கா, Carrot எவ்ளோக்கா" என்று எதார்த்தமாகக் கேளுங்கள்.
ஏதேனும் கடினமான சூழலில் இருப்பவர்களிடம் பேசும்போது, உங்களுடைய இன்பமான நிகழ்வுகளைப் பகிர்வதை, முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் உங்களை சிறப்பித்துக் காட்டும் விஷயங்களை மட்டுமே போடாதீர்கள்.
நீங்கள் ஒருவரிடம் பேசுகிறீர்கள் என்றால் முடிந்தவரை உங்களுக்கு எதிரே இருக்கும் நபருக்கும் உங்களுக்கும் பொதுவாக அமையும் விஷயங்களில் கவனம் செலுத்தி பேசிக்கொள்வது சிறந்தது. அது நிச்சயம் உங்கள் மீது பிறருக்கு நல்ல அபிப்பிராயத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.
காய்கறிக்காரரிடம் காய்கறிக்காரராக மாறுங்கள்.
பிச்சைக்காரனிடம் பிச்சைக்காரனாக மாறுங்கள்.
விவசாயியிடம் விவசாயியாக மாறுங்கள்.
பில் கேட்ஸிடம் பில் கேட்ஸாக மாறுங்கள்.
தேவையில்லாமல் உங்கள் திறன்களையும், வளங்களையும் கண்ணாடி போன்று அனைவருக்கும் தெரியப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு பல வகையில் நன்மை புரியும். பிறர் உங்கள் மீதான பிம்பத்தை சிறப்பாக வைத்திருக்க இந்த ஒளிவு மறைவு நன்கு கைகொடுக்கும்.
ஒப்பீடு செய்ய எதுவுமே இல்லை என்றால், பொறாமைப்படவும் எதுவுமில்லை. பொறாமை இல்லாத இடத்தில் நட்பு மேலோங்கும்.