இன்று செய்யக்கூடிய வேலையை ஒருபோதும் நாளைக்குத் தள்ளிப் போடாதீர்கள் - பெஞ்சமின் பிராங்கிளின்
வேலைகளை காலாகாலத்தில் நாம் செய்யத் தவறிவிட்டால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனைத்தான் 'காலத்தே பயிர் செய்' என்று முன்னோர்கள் கூறினார்கள்.
காலம் தாழ்த்தாமல் கடமையைச் செய். இல்லையேல், காலம் உன்னைத் தாழ்த்திவிடும் - வேதாத்திரி மகரிஷி.
எனவே, நாம் நமது கடமைகளைக் காலத்திலேயே செய்து விட வேண்டும். இல்லையேல், பிற்காலத்தில் காலம் நம்மைத் தாழ்த்தி விடும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
கடமையை உணர்ந்திடு. காலத்தே செய்திடு. உடலுக்கும் நல்லது. உள்ளத்திற்கும் அமைதியாம். - வேதாத்திரி மகரிஷி
எனவே, நாம் நமது கடமையை உணர்ந்து காலத்தே செய்து விட்டால், உடலும் நல்லபடியாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும்.
கடமையை காலத்தே செய்வது குறித்து ஒரு கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊருக்கு ஒரு பெரிய அறிவாளி விஜயம் செய்திருந்தார். அந்த அறிவாளி ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கு ஒரு அறிவுரை கூறுவார்.
ஒரு செல்வந்தர் தானும் அந்த அறிவாளியைச் சந்தித்து ஒரு அறிவுரை கேட்கச் சென்றார்.
'இன்றே செய்ய முடிக்கக்கூடிய செயல்களை, நாளைக்கு தள்ளி போடாதீர்கள்' என்றார் அறிவாளி.
அதைக் கேட்ட செல்வந்தர் ஆயிரம் ரூபாயை அந்த அறிவாளிக்கு கொடுத்துவிட்டு, மனதில் எண்ணிக் கொண்டார். 'இது என்ன பெரிய அறிவுரை! இதனால் எனக்கு ஆயிரம் ரூபாய் வேறு செலவாகிவிட்டது!' என்று நினைத்துக் கொண்டார்.
அன்று செல்வந்தருக்கு அவரது தொழிற்சாலை கிடங்கிற்கு பல்வேறு கச்சாப் பொருட்கள் வந்து இறங்கின. பல இலட்சம் ரூபாய் செலவழித்து அந்த கச்சாப் பொருட்களை செல்வந்தர் தனது தொழிற்சாலைக்காக வாங்கி இருந்தார். பல லாரிகளில் வந்த கச்சாப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டபோதே மாலை 6:00 மணி ஆகிவிட்டது. இருட்டும் நேரம் வந்துவிட்டது. கச்சாப் பொருட்களை நாளை கிடங்கிற்கு கொண்டு செல்லலாம் என்று செல்வந்தர் எண்ணினார். அதுவரை அவை வெளியில் கிடக்கட்டும் என்று எண்ணினார்.
அப்போது அவருக்கு அந்த அறிவாளி சொன்ன அறிவுரை ஞாபகத்திற்கு வந்தது. இன்று செய்து முடிக்க கூடிய வேலையை நாளைக்கு தள்ளி போடாதே என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
உடனே கச்சா பொருட்களை வெளியில் இருப்பதற்கு பதிலாக கிடங்கிற்கு உள்ளே எடுத்துச் செல்லுமாறு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். எல்லா கச்சாப் பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல இரவு நேரம் ஆனது. பின்னர் செல்வந்தரும் ஊழியர்களும் வீடு திரும்பினர்.
அன்றிரவு திடீரென மிகப்பெரிய மழை உருவானது. தொடர்ந்து பல மணி நேரம் பெய்த மழையால் ஊர் சாலைகளில் நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
அப்போதுதான், செல்வந்தருக்கு தான் உடனே செய்த காரியத்தின் நன்மை புரிந்தது. அவர் மட்டும் தனது கச்சாப் பொருட்களை கிடங்கிற்குள் எடுத்துச் சென்றிருக்காவிட்டால் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பார். இலட்சக்கணக்கான நஷ்டத்தில் பாதிக்கப்பட்ட அவரது தொழிலின் எதிர்காலத்திற்கு பெரும் பங்கம் விளைந்திருக்கும்.
உடனே தனது கடமையைச் செய்ததால் அவர் நஷ்டத்தைத் தவிர்த்தார். எதிர்காலத்தில், தொழிலை வெற்றிகரமாக நடத்த கச்சாப் பொருட்கள் உதவும். அந்த ஆயிரம் ரூபாய் அறிவுரையானது பல இலட்சங்களை அவருக்கு சேமித்துக் கொடுத்தது.
எனவே, கடமையைக் காலத்தில் செய்வதை நாமும் வழக்கமாக்கிக் கொள்வோம். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைவோம்.