கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுக்கும் எல்லா முடிவுகளிலும் இதை செய்தால் பிறர் நம்மை என்ன நினைப்பார்களோ என்ற யோசனை எனக்கு வந்துகொண்டே இருக்கும். இந்த சிந்தனை நான் விரும்பும் எதையுமே என்னை செய்யவிடாது. இப்படி நம்மை நாமே பிறரை நினைத்து கட்டுப்படுத்திக் கொள்ளும் விஷயங்கள் என்னுடைய சுதந்திரத்தை பறித்தது போல உணர்ந்தேன். ஆனால் காலங்கள் ஓட ஓட, மனிதர்களைப் பற்றி அதிகம் புரிய ஆரம்பித்தது. உண்மையில் யாரும் நம்மை கண்டு கொள்வதில்லை என்பது தெரிந்தது. அப்படியே கண்டு கொண்டாலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பது பற்றி பெரிதாக யாருக்கும் கவலை இல்லை என்பதை புரிந்தது.
இருப்பினும், உங்களில் சிலருக்கு தொடர்ந்து பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற யோசனை உங்களை முடக்கி வைத்திருக்கலாம். அத்தகைவர்கள் இந்த 3 விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பிறர் உங்களை குறை கூறுவதால் உங்களுடைய தன்மை மாறிவிடாது: பிறர் உங்களைப் பற்றி கூறும் தவறான விஷயங்களால் உங்களுடைய உண்மையான தன்மை மாறிவிடும் என நினைக்க வேண்டாம். வெளியில் இருந்து பார்க்கும்போது உங்களைப் பற்றி அவர்களுக்கு ஏதோ தோன்றுவதை பேசுகிறார்களே தவிர, உண்மையிலேயே உங்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்தால்போதும். இதை புரிந்துகொண்டால், பிறர் என்ன கூறினாலும் அது உங்களை காயப்படுத்தாது. பிறர் உங்களை குறை கூறினால் மட்டுமே நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள் என அர்த்தம்.
உங்களை ஒருவர் ஒதுக்கினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: உங்களை ஒதுக்குவது அல்லது தவிர்ப்பது போன்ற விஷயங்களை மிகவும் சீரியஸாக பார்க்காதீர்கள். ஒருவர் உங்களை ஒதுக்குகிறார் என்பதற்காக நீங்கள் எந்த தகுதியும் இல்லாத நபர் என நினைக்க வேண்டாம். ஒருவரை தவிர்ப்பது என்பது அந்த தனிப்பட்ட நபரின் சிச்சுவேஷன் சார்ந்த விஷயமாகும். எனவே அதனால் நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் எனத் தோன்றினால், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தைரியமாக இருங்கள்.
நாம் அனைவரிடமும் குறைகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்: நாம் அனைவருமே பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்து கவலைப்படுகிறோம். இந்த கவலை எல்லா மனிதனுக்கும் பொதுவானது. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், நாம் அனைவரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. இது மட்டுமே நம்மை மனிதர்களாக இருக்கச் செய்கிறது. குறைகள் இல்லாமல் பெர்பெக்ட்டாக இருப்பதற்கு நாம் ஒன்றும் ரோபோக்கள் கிடையாது. எனவே பிறரைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.