
அன்றுதொட்டு இன்றுவரை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வேலையின்மை. அதுவும் தற்போது வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இதற்கு அந்த காரணம் இந்த காரணம் என்று கூறுவதற்கு பதிலாக, ஒரு வேலையைப் பெறுவதற்கு நாம் சரியான தகுதிகளோடு இருக்கிறோமா என்று சிந்தித்தல் முக்கியம்.
நமக்கு ஒரு வேலையை பெறுவதற்கான திறமைகள் தகுதிகள் இருக்கின்றதா என்று சிந்திக்க வேண்டும். எனவே வேலை இல்லாமல் நம் இருக்கும் தருணங்களை ஒரு வாய்ப்பாக எண்ணி நம்மை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவோம். அதுவே நமக்கு ஒரு வேலையை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். நமக்கு நம் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு தைரியமாக வாய்ப்புகளைத் தேடி அலைய உத்வேகம் பிறக்கும்.
ஒருவர் எந்த வேலைகளும் இல்லாமல் இருக்கும் போதுதான், அவர்களின் எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருக்கும். எதிர்காலம் மற்றும் சமூகம் சார்ந்த பயங்கள் அதிகமாக இருக்கும். அந்த பயமே அவர்களுக்கு ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்னும் ஊக்குவிப்பை அளித்து மாற்று சிந்தனைகளை முயற்சிக்க தூண்டுகலாக இருக்கும்.
இங்கே அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால், வேலை இல்லையென்றால் தங்களை குறைத்து மதிப்பிட்டு, மிகவும் கடினமாக உணர்கிறார்கள். ஆனால் நாம் கவலைகளில் மூழ்குவதால் நம்முடைய எதிர்காலம் மாறிவிடாது. அந்தக் கடினமான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல துறைகளில் நம் திறமைகளை மேம்படுத்த முயற்சிக்கலாம். ஒரு வேலையை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் திறமைகள் வேண்டும் என அறிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ப நம்மைத் தயார் படுத்தலாம்.
வேலையின்மையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, எதிர்காலத்திற்காக உங்களை செதுக்குங்கள். அப்போதுதான் நீங்கள் சிலையாக ஆகாவிட்டாலும், ரோடு போட பயன்படும் ஜல்லிக்கல்லாவது ஆக முடியும்.
எனவே, உடைபடுங்கள். எதுவுமே செய்யாமல் அமைதியாய் இருக்கும் பிரம்மாண்ட மலை, எதற்கும் பயன்படாது.