இறைவனுடைய படைப்பே முன்னேற்றம்தான். முயற்சியே முன்னேற்றத்தின் அடையாளம். வளர்ச்சி என்பது நம்மைப்போல பலர் முயன்று முயன்று வெற்றி அடைந்ததுதான். நாம் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகவும் அமைகிறது. முயற்சி செய்வதில் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏனெனில் வெற்றி பெறுவதில்தான் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.
உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு தேவையோ அதே அளவுக்கு வாழ்க்கைக்கு வெற்றி அவசியம். நம்முடைய முன்னோர் பலவிதமான முயற்சிகளை செய்து வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்று இருக்கின்றனர். அந்த பரம்பரையினரான நாம் அதில் இடம்பெற முயற்சி செய்ய வேண்டும்.
உலகம் தொடங்கிய நாளோடு இன்றைய நிலையை ஒப்பிட்டால் நினைக்க முடியாத பல வகையான மாறுதல்கள் ஏற்பட்டு இருப்பதை காணமுடியும். இதுபோன்ற மாறுதல்களுக்கு எல்லாம் முயற்சியே முன்னேற்றத்தின் அடிப்படையாக விளங்குகிறது .
நம்மிடம் உள்ள சக்தி அளப்பரியது. மற்ற விலங்குகளிடம் ஏதாவது ஒரு சக்திதான் தலைதூக்கி இருக்கும். ஆனால் நம்மிடம் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து உயர்வான தன்மையில் விளங்குகிறோம்.
எறும்பினிடம் உள்ள சுறுசுறுப்பு; தேனியிடம் உள்ள உழைப்பு; கழுதையிடம் உள்ள பொறுமை; நாயின் நன்றி உணர்ச்சி; காக்கையின் கூட்டுறவு ;குதிரையின் வேகம் ;புலியின் சீற்றம்; நரியின் தந்திரம் ;யானையின் பலம்; சிங்கத்தின் கம்பீரம்; மயிலின் அழகு; மானின் ஓட்டம்; இவற்றின் சக்திகள் அனைத்தும் ஒருங்கே மனிதனிடத்தில் மட்டும்தான் கூடியிருக்கிறது.
ஆறறிவு பெற்ற மனிதன் நம்முடன் இருக்கும் நன்மைகளை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையை இன்ப மலர்கள் அள்ளிக் கொடுக்கும் பூந்தோட்டமாக மாற்றி விட முடியும்.
முன்னேற்றத்திற்கு அடிப்படையான அமைப்புகளான குறிக்கோள் ,உறுதி, நம்பிக்கை, சிந்தனை, உயர்வான எண்ணம், ஒருமைப்பாடு, முழுத்திறன், விடாத உழைப்பு, சோம்பலின்மை ஆகிய கூட்டு பலன்களை சேர்த்து செயல்பட்டால் நிச்சயமாக முன்னேற்றம் அடைய முடியும். முயற்சி மூலப் பொருளாக அமையும்போது நிச்சயம் வெற்றி பெற்று விடலாம்.