
மைக்கேல் பாரடே 1791 - ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். அவருடைய தந்தை இரும்பு பட்டறையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த பாரடே பணமின்மையால் நிறைய அவமானங்களை கண்டு, பசியினால் அவதிப்பட்டிருக்கிறார். படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் ஒரு புத்தகக் கடையில் எடுபிடி வேலை வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த இவர் மின் சக்தி உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்து மனித இனத்தின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கப் போகும் மாபெரும் விஞ்ஞானியாக விளங்கப் போகிறார் என்பதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
அவருக்கு 19 - வது வயது நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது அவர் புத்தகக் கடையில் கிழிந்து போயிருந்த புத்தகங்களைத் தைத்து 'பைண்ட்' செய்யும் வேலையை செய்து வந்தார். அப்படி பைண்டுக்கு வந்த புத்தகங்கள் அனைத்தையும் அவர் விரும்பி ஆர்வத்துடன் படித்து வந்தார்.
அவர் ஒருமுறை மின்சார சக்தியை பற்றி எழுதப்பட்டிருந்த புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது. மின் சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆசை அவருடைய உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது.
காந்த சக்தியை உபயோகித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை, அவர் கடினமான ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்தார். விஞ்ஞான சாஸ்திரத்தையும் கணக்கையும் சொல்லிக் கொடுக்கும்படி பாரடே ஒருவரிடம் கேட்டுக்கொண்டார். தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததற்காக பாரடே அவருடைய வீட்டைப் பெருக்கித் துடைத்து அவருடைய பூட்சுக்கு பாலிஷ் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஒருமுறை ஹம்ப்ரிடேவி என்ற பெரிய ஆராய்ச்சியாளருடைய பேச்சை பற்றி புகழ்ந்து எழுதி அவருடைய ஆராய்ச்சிக் கூடத்தில் ஏதாவது ஒரு வேலை தரும்படி கேட்டுக் கடிதம் எழுதினார்.
டேவி தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்யும் ஒரு உதவியாளனாக அவரை அமர்த்திக்கொண்டார். பல வருடங்களுக்குப் பின்பு, தான் கண்டுபிடித்தவைகளில் மதிப்பு வாய்ந்தது பாரடேதான் என்று டேவி பெருமையுடன் கூறியிருக்கிறார்.
பாரடே பல கஷ்டங்களுக்கிடையில் மின்சக்தி உற்பத்தி செய்வதைப் பற்றி சொந்தமாக ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தார். காந்த சக்தியை உபயோகித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை அவர் கண்டுபிடித்தார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவியது. டரான்ஸ்பார்மர்கள், எலக்ட்ரிக் மோட்டார்கள், ரேடியோ, டெலிவிஷன் போன்ற பல சாதனங்களைக் கண்டுபிடிக்க, அவருடைய கண்டுபிடிப்பு உபயோகமாக அமைந்தது.
ஒருநாள் அவர் வரும்படியை நாடி உழைப்பதில்லை என்றும் ஆராய்ச்சிகளுக்காகவே உயிர் வாழப்போவதாகவும் உறுதி எடுத்துக் கொண்டு நிறைய பணம் கொடுத்து வந்த பல வேலைகளை உதறித் தள்ளிவிட்டு ஆராய்ச்சிகளில் முழுநேரமும் ஈடுபட்டார்.
ராயல் சொசைட்டி ஆராய்ச்சிகளுக்காக அவருக்கு கொடுத்த ஐநூறு பவுன் வருட சம்பளத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல சாதனங்களை இயக்கும் மின் சக்தியை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய பாரடேவை 'மின்சாரத்தின் தந்தை' என்று அழைக்கிறார்கள்.
அவருக்கு அரசாங்கம் பல விருதுகளையும், பட்டங்களையும் அளிக்க முன்வந்தது. ஆனால் அவர் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.
இன்று நாம் மிக எளிதாக உபயோகிக்கும் அனைத்து சாதனங்களையும் கண்டுபிடித்தவர்கள் அனைவருமே, துன்பத்தின் பிடியில் சிக்கி, தனது அயராத உழைப்பினால் முன்னேறியவர்களே. தனக்காக அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகளில் ஈடுபடவில்லை. மனித குலமேன்மைக்கே உழைத்தார்கள். இன்று அவர்களது புகழ் உலகம் முழுக்க உலாவருகிறது.