
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்தான சமச்சீரான உணவுகள் அவசியம். சத்தற்ற குப்பை உணவுகள் உடல் நலனைப் பாதித்து நோய்களை உருவாக்கிவிடும். நமது மனமும் ஒரு சக்தி வாய்ந்த உடல்தான். எதிர்மறையான எண்ணங்களை மனதிற்கு தீனியாகத் தருவதன் மூலம் நிம்மதியின்மை, பதட்டம், பயம், சந்தேகம் போன்றவற்றை உருவாக்கி இறுதியில் நிம்மதியை தொலைத்து விடுகிறோம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்
மனித மனம் தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை கவனமாக உள்வாங்கிக் கொள்கிறது. சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திகள், நாட்டில் நடக்கும் விஷயங்கள், அலுவலகத்தில், வீட்டில் உடன் இருப்பவர்கள் பேசும் பேச்சுகள், அது குறித்த கருத்துகள், உரையாடல்கள், வதந்திகள், புகார்கள் போன்றவை எதிர்மறை உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அவை விரைவில் மனிதர்களை சோர்வுறச் செய்து அமைதியற்ற மனநிலையை உருவாக்கிவிடுகின்றன.
மீண்டும் மீண்டும் அச்சமூட்டும் பயம் சார்ந்த செய்திகளைப் படிக்கும் போது, பார்க்கும்போது, கேள்விப்படும்போது மனம் ஏமாற்றத்தையும் ஆபத்தையும் எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. சாதாரண செயல்களைக் கூட நிம்மதியாக செய்ய முடியாமல் பதட்டம் உருவாகி கவலையும் சோர்வையும் உண்டாக்கி விடுகிறது. இது உறவுகளைப் பாதிப்பதோடு அன்றாட அலுவல்களையும் சேர்த்துப் பாதிக்கிறது.
வதந்திகள், வெறுப்பு, அவநம்பிக்கை தேவையற்ற கவலை போன்ற குப்பை எண்ணங்கள் மனதிற்கு அதிகமாக தீங்கு விளைவிக்கும். அவை ஒருவரது ஆக்கபூர்வமான மகிழ்ச்சியான சிந்தனையை நசுக்கி, அவ நம்பிக்கையான மனப்பான்மையை உருவாக்குகிறது. இடைவிடாமல் உண்ணும் குப்பை உணவு உடலுக்கு நோயை ஏற்படுத்துவதுபோல தொடர்ச்சியான எதிர்மறை உணர்ச்சிகள் மனிதர்களை அதீதமான மன அழுத்தத்திற்கு தள்ளிவிடுகிறது.
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்களால் தமது பணியை ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்ய முடியாது. குறைந்த உற்பத்தித் திறனையே தருவார்கள். எதிர்மறை சிந்தனைகளை பரப்பும் தலைவர்கள் தமது சொந்த கண்ணோட்டத்தை மட்டும் பரப்பவில்லை அவர்களை சுற்றி உள்ள குழுவினர், பொதுமக்கள் அனைவரையும் சேர்த்தே பாதிக்கிறார்கள்
குப்பையான எதிர்மறை உணர்வுகளை மனதிலிருந்து வெளியேற்றுவது எப்படி?
நேர்மறையான சிந்தனை:
மனதில் தேங்கியிருக்கும் குப்பையான எதிர்மறை உணர்வுகளை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் ஆக்கபூர்வமான சிந்தனைகள் பிறந்து, செய்யும் செயல்களும் சிறக்க வழி கிடைக்கும். மனம் முழுக்க நேர் மறையான சிந்தனைகளை நிரப்பவேண்டும். அமைதி, நன்றி உணர்வு, நல்லெண்ணம், நம்பிக்கை போன்ற நல்ல நேர்மறையான உணர்வுகளை மனதில் வளர்க்கவேண்டும்.
நம்பிக்கை:
நம்பிக்கையான எண்ணங்கள் நேர்மறையான அணுகுமுறையை உருவாக்கும். அவை பிரச்சனைகளை தடைகளாக பார்க்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்க்க உதவுகிறது. நம்பிக்கையூட்டும் புத்தகங்களை வாசிப்பது, நல்ல நேர்மறை சிந்தனையுள்ள மனிதர்களின் ஆலோசனைகளை கேட்பது போன்றவை தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
நன்றி உணர்வு:
சிறிய விஷயங்களுக்கு கூட நன்றி உணர்வுடன் செயல்படும்போது பெரிய செயல்களை மிக எளிதாக செய்யமுடியும். மனதில் நன்றி உணர்வு எழும்போது அது சம்பந்தப்பட்ட மனிதரை மட்டுமல்ல, சுற்றியுள்ள மனிதர்களையும் சேர்த்து நேர்மறையாக மாற்றும் சக்தி படைத்தது. நன்றி உணர்வை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது சுற்றிலும் உள்ள தீமையான சூழ்நிலைகளைக் கூட மாற்றி நன்மை தரும் சூழ்நிலைகளை கொடுத்துவிடும்.
சத்தான உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியமாக இருப்பதுபோல, நல்ல எண்ணங்களை மனதிற்கு அளித்து மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடன் ஒரு மனிதன் வாழமுடியும்.