
உணர்வு சார் நுண்ணறிவு என்பது என்ன?
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளையும் பிறருடைய உணர்ச்சிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுதல். தன்னுடைய உணர்ச்சிகளை நன்றாக சமாளிக்கவும், கட்டுப்படுத்தவும் தெரிந்து பிறர் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலோ கோபமாக இருக்கும் போதோ அவர்களை சமாதானப்படுத்த தெரிந்து கொள்ளும் நுண்ணறிவு கொண்டிருத்தல். ஒருவருக்கு உணர்வு சார் நுண்ணறிவு அதிகமாக இருந்தால் அவர் தன்னுடைய வேலையிலும் வாழ்க்கையிலும் மிகவும் வெற்றிகரமாக திகழ்வார்.
உணர்வு சார் நுண்ணறிவைக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?
1. தன்னம்பிக்கை அதிகரித்தல்;
உணர்வு சார் நுண்ணறிவு கொண்ட ஒருவருக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருப்பார். தன்னைத் தானே அவரால் ஊக்குவித்துக் கொள்ள முடியும். தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். எல்லாவித சூழ்நிலைகளிலும் நேர்மறையாக சிந்தித்து செயல்பட முடியும்.
2. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல்;
தங்களுடைய உணர்ச்சிகள் பிறரை எப்படி பாதிக்கும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதேபோல பிறருடைய உணர்ச்சிகளை அவர்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள். பிறரின் விமர்சனங்களை கூட நேர்மறையாக எடுத்துக் கொண்டு தங்களுடைய குறைகளை மாற்ற முயற்சி எடுப்பார்கள்.
3. நேர்மறை தன்மையை ஊக்குவிக்கிறது;
நேர்மறை தன்மையை ஊக்குவிக்கிறது. அவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்தால் கூட அதை ஒரு அதை அவமானமாக நினைக்காமல் தாங்கள் கற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது என்று நினைத்துக் கொள்வார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்கு நேர்மறை மனப்பான்மையையும், திறந்த மனத்துடன் செயல்படவும் பிறருடன் அனுசரித்துப் போகவும் உதவுகிறது.
4. பிறரைப் புரிந்து கொள்ளுதல்; தங்களுடைய சக பணியாளர்களிடம் ஒரு பலமான உறவை ஏற்படுத்த உதவுகிறது. அவர்களை மதித்தல், நம்புதல் அவர்களுடைய கஷ்டங்களை புரிந்து கொள்ளுதல், அவர்கள் துயரங்களை காது கொடுத்து கேட்டல் போன்ற காரணங்களால் தங்களுடைய சக பணியாளர்களுடன் ஒரு குழுவை வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியும்.
5. மாற்றங்களை எதிர்கொள்வார்கள்
மாற்றங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வார்கள். வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்து இவர்கள் புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்வார்கள்.