மகிழ்வித்து மகிழ... சந்தோஷம் இரட்டிப்பாகும்!

Double the happiness!
happy family
Published on

கிழ்வித்து மகிழ்வது என்பது பிறரை சந்தோஷப்படுத்தி அதன் மூலம் நாமும் சந்தோஷமாக இருப்பது. நாம் எப்பொழுது பிறரை மகிழ்விக்க முடியும்? நாம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் பிறரையும் அந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மகிழ்ச்சியாக இருப்பதும் வாழ்வதும் ஒரு கலை. சிலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர் இருந்தாலே கூட்டம் களைகட்டும் என்பார்கள். அவர் பேசினாலோ அனைவர் மனமும் சந்தோஷத்தில் பொங்கும் என்பார்கள். தான் மகிழ்வாக இருப்பதுடன் பிறரையும் மகிழ்விப்பது என்பது ஒரு சிறந்த பண்பு. மகிழ்ச்சி என்பது இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த வரம். அந்த மகிழ்ச்சியால் பிறரையும் மகிழ்வித்து மகிழ்வது மிகவும் உயர்வான செயலாகும்.

பகிரப்படும் மகிழ்ச்சி எப்பொழுதுமே இரட்டிப்பாகும் பகிரப்பட்ட கவலை பாதியாக குறையும். மகிழ்ச்சி என்பது எப்பொழுதுமே அன்பு சார்ந்தது. சாதாரணமாக 'சாப்டியா', 'நல்லா தூங்கினியா' போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலருக்கு சந்தோஷம் கிடைக்கும். அது வாழ்தலுக்கான நம்பிக்கையையும் கொடுக்கும். நம் எதிரில் இருப்பவரின் முகம் சந்தோஷத்தில் மலரும் பொழுது நாமும் நம்மை அறியாமல் மகிழ்ச்சி கொள்வோம். இதைத் தான் மகிழ்வித்து மகிழுங்கள் என்று கூறுகிறார்கள். நம் உள்ளத்தில் இருக்கிறது ஆனந்தம். இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எதுவும் இல்லை. சந்தோஷப்படுவதற்கு காரணம் ஒன்றும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்படலாம். மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி பார்க்கலாம்.

சிலர் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடுவதை உணவின் வழியாகக் கொண்டாடு வார்கள். விருப்பமான உணவுகளை சமைத்து ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டே அரட்டை அடித்தபடி சாப்பிடுவதை உண்மையான கொண்டாட்டமாக நினைப்பார்கள். கூடிப் பேசி சிரித்து மகிழ்வதும், உண்டு மகிழ்வதும் சிறந்த கொண்டாட்டமாக மகிழவும், நம்மை சார்ந்தவர்களை  மகிழ்விக்கவும் செய்கிறது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது ஆழமான தொடர்புகளை வளர்க்கும். சொந்தம் மற்றும் சமூகத்தின் உணர்வுகளையும் மேம்படுத்தும்.

பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் கருணை செயல்களுக்கு வழி வகுக்கும். சிலர் தனிமையில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியும், நிறைவையும் அளிப்பதாக இருக்கும். இதையே மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பொழுது பல மடங்கு பெருகும்.

இதையும் படியுங்கள்:
பேரார்வம் தருமே பெரும் வெற்றி..!
Double the happiness!

நாம் சமூக விலங்குகளாக உள்ளோம். தலைமுறை தலைமுறையாக நம் ஆழ்மனம் ஒவ்வொரு உணர்ச்சியையும் நம் அன்புக்குரியவர்களுடனும், நெருங்கியவர்களுடனும் தொடர்பு படுத்துகிறது. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது, பிறரை நேசிப்பது என ஏறக்குறைய நம்முடைய எல்லா விஷயங்களுமே மற்றவர்களுடன் தொடர்புடையது. எனவே மகிழ்ச்சியான, மிக முக்கியமான உணர்ச்சியை ஒருபோதும் பகிர்வதிலிருந்து பிரிக்க முடியாது. மகிழ்ச்சியையும், உணர்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இதன் மூலம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கிறோம்.

மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பொருளிலோ இல்லை. அது நம்  மனதிலும் உணர்விலும் உள்ளது. மகிழ்ச்சியான மனிதர்கள் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கின்றனர். மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிக்க நாம் மற்றவருடன் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். சுவை அறியாத தேனீக்களால் சுவை மிகுந்த தேனை உருவாக்க முடிவதில்லை. அதைப்போல் மகிழ்ச்சி அடையாத மனிதர்களால் பிறருக்கு எந்தவிதமான மகிழ்ச்சியும் தந்து விட முடியாது.

மகிழ்வித்து மகிழ சந்தோஷம் இரட்டிப்பாகும்! செய்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com