அனுபவமே சிறந்த ஆசான்!

 அனுபவமே சிறந்த ஆசான்!
Published on

'அனுபவமே சிறந்த ஆசான்' எல்லோருக்கும் தெரிந்த வாசகம்தான். ஆனால், எத்தனை பேர் அந்த ஆசானிடம் பாடம் கற்று இருக்கிறார்கள்...? கற்ற பாடத்தை எத்தனை பேர் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்...? 

முதுகில் புத்தக மூட்டை சுமந்து படித்த கல்வி கற்றுத் தருவதை விட, நம் சொந்த அனுபவத்தால் கற்றுக் கொள்வது அதிகம்.

''ஏட்டுக் கல்வி, அனுபவக் கல்வி இரண்டுமே முக்கியம்தான். ஆனால், மதிப்பெண்கள்தான் எப்போதும் முதல் இடம் பிடிக்கிறது. மதிப்புகள் இரண்டாம் இடம்தான் ஆகின்றன...!''

''அனுபவக் கல்வியை எப்போதும் நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கான முக்கியத்துவம் குறித்து நாம்தான் அறியாமல் நாம் இருக்கிறோம்.

ஏட்டுக் கல்வி அடிப்படைகளைக் கற்றுத் தரும். அது அவசியம்தான்.

ஆனால், அடிக்கு அடி முன்னேறிக் கொண்டே இருக்க, அனுபவக் கல்விதான் தேவை. பலர், நேர்மையாக இருக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் அப்போதுதான் வெல்ல முடியும் என்று சொல்வார்கள்.

ஆனால், நீங்கள் எதை நேர்மை என்று நினைக்கிறீர்களோ அது மற்றவர்களுக்கு நேர்மையற்றதாக தோன்றலாம்.

ஆக, மற்றவர் பார்வையில் இருந்தும் எது நேர்மை என்று கொள்ளப்படுகிறதோ அதை நம் வாழ்க்கையில், வியாபாரத்தில், பணி இடங்களில் நடைமுறைப் படுத்தவேண்டும்.

இது அனுபவம் மூலமாகத்தான் தெரியும். எந்தப் புத்தகங்களும் கற்றுத்தராது.

அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும். இன்று நான்கைந்து வருடங்கள் கல்லூரியில் ஒரு படிப்பை படிக்கின்றோம்...

ஆனால், நம்மில் பலரின் தந்தையும், உறவினர்களும் தங்களின் வேலை தொடர்பான எந்தப் படிப்பும் படிக்காமலேயே அனுபவத்தால் தங்களின் வேலையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுக்கு பாடமாகத் திகழ்கிறார்கள்.

அப்படியானால் அடிப்படைக் கல்வி கற்றே களத்துக்கு வரும் நாம், அனுபவக் கல்வியின் துணை கொண்டு எந்த சிகரத்தையும் எட்டிப்பிடிக்கலாம் தானே...!

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக் கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்டவேண்டும். இந்த அனுபவப் பாடம் தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம்''.

நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும் என்பதும் நம் அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம். ஆனால், பசுமரத்து ஆணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.மாற்றம் குறித்து சிந்திப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com