
அமெரிக்காவின் பிரபலமான தன்னம்பிக்கை எழுத்தாளரான நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” (Think and Grow Rich) எனும் நூல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இவர் 1883 ஆம் ஆண்டு பிறந்து 1970 ஆம் ஆண்டு மறைந்தார். நவம்பர் (8 இன்று) அவர் மறைந்த தினம். இவர் மிகச்சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விரிவுரையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு கொண்டவர் களுக்கு, இவர் தன் அனுபவங்களின் மூலம் கண்டறிந்த வெற்றி ஆலோசனைகள் கொண்டதுதான் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் நூல். இவர் மறைந்தபோது இந்த நூல் சுமார் 20 மில்லியன் பிரதிகள் விற்று இருந்தது மிகப்பெரிய சிறப்பு. ஒரு தொழில் முனைவோராகவோ அல்லது சுய முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ளவராகவோ இருப்பவரா நீங்கள்? இந்த கொள்கைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
ஆசை - ஆசைதான் சாதனைகளுக்கான முதல் தொடக்கப் புள்ளி. வெறும் விருப்பம் மட்டும் போதாது. உங்களை செயலில் ஈடுபட வைக்கும் அல்லது செயலுக்கு தூண்ட நிச்சயம் ஆசை வேண்டும்.
நம்பிக்கை - வெற்றிக்கு முக்கியமானது நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய முடியும். உங்கள் செயல்களில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது இந்த நம்பிக்கை.
சுய ஆலோசனை - சுய ஆலோசனை என்பது உங்கள் சுய சக்தியை வலியுறுத்தி நேர்மறையான எண்ணங்களை ஆழ்மனதில் ஏற்படுகிறது. செயல்களை இலக்குகளுடன் இணை கோட்டில் செலுத்துகிறது.
சிறப்பு அறிவு - வெற்றிக்கு அறிவு அல்லது அந்த துறையில் உள்ள நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஒரு செயல் வெற்றி அடைவதற்கு அதைப் பற்றிய சிறப்பு அறிவு என்பது அந்தத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னேற உதவுகிறது.
கற்பனை வளம் - கற்பனை வளம் வெற்றியை ஊக்குவிப்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி ஆகும். சிக்கல்களை தீர்க்கவும் புதுமைகளை உருவாக்கவும் நமது கற்பனை வளம் பயன்படுத்தப்படும். இது வெற்றிக்கான தூண்டுகோலாக செயல்படுகிறது.
திட்டமிடல் - ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட திட்டமிடல் என்பது நமது இலக்குகளை எளிதாக அடையக்கூடிய அடித்தளம். ஓர் உறுதியான திட்டத்தின் மதிப்பை வலியுறுத்தும் ஹில் ஆலோசகர்களின் மாஸ்டர் மைண்ட் குழு தேவை எனவும் சொல்கிறார்
முடிவெடுத்தல் - வெற்றிகரமான மனிதர்களிடையே தீர்க்கமான முடிவெடுத்தல் எனும் தன்மை இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு விரைவான முடிவுகளை எடுப்பதும் எடுத்த முடிவை உறுதியுடன் பற்றிக் கொண்டு மாறாமல் இருப்பதும் அவசியம்.
விடா முயற்சி - வெற்றி என்பது பெரும்பாலும் பல தடைகள் நிறைந்த நீண்ட பயணம் . இந்த தடைகளை தாண்டி இலக்கை அடைய முயற்சி மிக அவசியம்.
மாஸ்டர் மைண்ட் - ஒரு தனிநபரின் நுண்ணறிவை விட அதிகமாக இருக்கும் ஒரு குழுவினரின் அறிவு. அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இருக்க வேண்டும்.
பாலுணர்வு - தவிர்க்க முடியாத இயற்கை உணர்வான பாலுணர்வை மடைமாற்றம் செய்வதானால் ஆற்றலை உற்பத்தி ஆற்றலாக மாற்றி படைப்பாற்றல் மற்றும் லட்சியத்தை தூண்டலாம்.
ஆழ்மனம் - ஆழ்மனது நமது ஆசையை மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பொக்கிஷம் ஆகும். இலக்கை நோக்கிய எண்ணங்களால் அதற்கு ஊக்கம் தந்து அவற்றை செயல்படக்கூடிய முடிவுகளாக மாற்றி வெற்றி தரும்.