அனுபவமே நம்மை வாழ்க்கையில் உயர்த்தும்!

Experience will elevate us in life!
Experience will elevate us in life!

அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக் கொண்டது. வேலைவாய்ப்புப் பற்றிய விளம்பரங்களில் கூட முன் அனுபவம் பற்றிக் கேட்கிறார்கள். தொழில் தொடர்பானது என்றாலும், அனுபவ அறிவு என்பது தான் அதில் முதன்மையானது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு உதவும்.அதே நேரத்தில் ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத் தான் பாடங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்குக் காலம் போதாது.

மற்றவர்களது அனுபவங்களில் இருந்துப் பாடம் கற்றுக் கொள்கிறவர்களே அறிவாளிகள் என்கிறார் வால்டேர்.மற்றவர்கள் செய்த தவறுகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தத் தவறுகள் எல்லாம் நீங்களே செய்து நீங்களே ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நேரம் போதாது என்கிறார் மற்றோர் அறிஞர்.

மேலும் வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த நடவடிக்கைகளில் குழப்பம் இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ அந்தந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்தவர்களிடம் அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

அனுபவ அறிவு என்பது எல்லோருக்கும் வருகிறதா?

எல்லோருக்கும் அனுபவங்கள் வருகின்றன. ஆனால் வெகு சிலரே அனுபவ அறிவைப் பெறுகின்றனர். விழிப்புணர்வுடன் இருந்தால் அனுபவ அறிவு கிடைக்கும். சிறிய செயல் முதல் பெரிய செயல் வரை இது பொருந்தும். அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை. கூடுதல் விலை கொடுத்தே வாங்க வேண்டும் என்கிறார் ஷேக்ஸ்பியர் .

அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு. அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம் என்கிறார் மற்றோர் அறிஞர். எச்சரிக்கை உணர்வு என்பது அனுபவ அறிவைப் பயன்படுத்துவோரிடம் கண்டிப்பாக இருக்கும்.தன் அனுபவங்களில் இருந்து ஒருவன் தன்னைப் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம். தன் பக்கம் ஏதாவது தவறு , குறை இருந்தால் புரிந்து விடும். யார், யாரிடத்தில் எந்த நேரத்தில் எப்படிப் பேசினால் சரியான அணுகுமுறையாய் இருக்கும் என்பது பழக்கத்திற்கு வந்து விடும்.

அனுபவ அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்கு மனப்பக்குவம் எளிதாய் வரும். அனுபவங்களால் அவதிப்படுபவர்கள் அந்த அனுபவங்களை எடை போட்டு அவை தந்த அந்தப் பாடங்களை எண்ணிப் பார்ப்பது தான் விவேகம். அதேபோல் நல்லதோ, கெட்டதோ எல்லாமே அனுபவத்தின் கூறுகள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் விரும்புவது மட்டுமே அனுபவம் அல்ல. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருப்பது போல அனுபவத்திலும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்தில் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்! 
Experience will elevate us in life!

அனுபவத்தில் தொடர்புடைய மனிதர்களை மறந்து விட்டு அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும். அனுபவ அறிவின் பயனைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒவ்வொரு அனுபவத்தின் முடிவில் இருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொள்கின்றோம். அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும். அனுபவங்களும், அனுபவம் பெற்றவர்கள் தரும் கருத்துக்களும் அறிவுரைகளும் நம்மை வழி நடத்தும் கருவிகளாகும்.

வாழ்க்கைப் பாதையில் அனுபவம் தரும் பட்டறிவைப் போன்ற வழி காட்டு நெறி ஏதுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com