பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொல் பிரச்சினை. “எனக்கு இருக்கிற மாதிரி யாருக்குமே பிரச்சினை இருக்காது”, “நானா இருக்கவே இந்த பிரச்சினையை சமாளிக்கிறேன். வேற யாராவது இருந்தா அவ்வளவுதான்”, “எப்ப பார்த்தாலும் ஒரே பிரச்சினை. என்ன பண்றதுன்னே புரியலே”, “ஆபிசுக்கு போனா அங்கேயும் பிரச்சினை. வீட்டுக்கு வந்தா அங்கேயும் பிரச்சினை”, “எப்பவாவது பிரச்சினைன்னா பரவாயில்லே. எப்பவுமே பிரச்சினைன்னா என்ன பண்றது ?”. இதுபோன்ற வரிகளை நாம் அன்றாடம் பேசுகிறோம். பிறர் சொல்லக் கேட்கிறோம்.

நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய பணக்காரர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை என அனைவரும் வெறுக்கும் ஒரு சொல் பிரச்சினை. மிகப்பெரிய தைரியசாலி என்று பெயரெடுத்தவன் கூட பிரச்சினை என்றால் பயப்படத் தொடங்குகிறான். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே பிரச்சினை பொதுவானது. அதை ஒரு உடன்பிறப்பு என்றே சொல்லலாம்.

பிரச்சினை இல்லாத மனிதன் ஒருவனை நீங்கள் அடையாளம் காட்ட முடியுமா ? நாம் ஒவ்வொவரும் பிறக்கும் போதே பலவிதமான பிரச்சினைகளோடுதான் பிறக்கிறோம். நமது வாழ்க்கையின் முதல் மூச்சில் தொடங்கி கடைசி மூச்சு வரை ஏதாவது ஒரு வடிவத்தில் பிரச்சினைகள் நம்மோடு கைகுலுக்கிக் கொண்டேதான் இருக்கின்றன. பிரச்சினைகளைக் கண்டு நாம் பயப்பட ஆரம்பித்தால் சாதாரண பிரச்சினை கூட மிகப்பெரிய பிரச்சினையாகத் தோன்றும். விடாமல் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். நாளடைவில் அது பெரிய பிரச்சினையாகவே மாறிவிடும். ஒரு நிமிடம் கூட நம்மால் நிம்மதியாக வாழ முடியாமல் போய்விடும்.

பிரச்சினைகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று தீர்க்கக் கூடிய பிரச்சினை. மற்றொன்று எவ்வகையிலும் தீர்க்க இயலாத பிரச்சினை. பிரச்சினைகளில் தொண்ணூறு சதவிகித பிரச்சினைகள் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளே. இந்த வகையான பிரச்சினைகளுக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினைகள் மிகக்குறைவே.

எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மனம்தான். நாம் ஒரு சிறிய பிரச்சினையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் நமக்குத் தெரிந்தவர் மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டி தவித்துக் கொண்டிருப்பார். அப்போது நமது மனம் “நாம் எவ்வளவோ பரவாயில்லை. அவரை மாதிரி பெரிய பிரச்சினை நமக்கில்லை” என்று நிம்மதி பெருமூச்சு விடும். அப்போது நம்முடைய பிரச்சினை நமக்கு சிறிய பிரச்சினையாகத் தோன்றும். இத்தகைய வேளைகளில் நமது மனம் வலிமை பெறும். பிரச்சினையும் மிக சுலபமாய் தீர்ந்து போகும்.

இதையும் படியுங்கள்:
வாய் விட்டு சிரிப்பதால் உண்டாகும் 8 நன்மைகள் தெரியுமா?
motivation article

ஒரு சிலர் சாதாரண பிரச்சினையை நினைத்து கவலைபட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு சிலரோ மிகப்பெரிய பிரச்சினையை கையில் வைத்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பார்கள். இரண்டுமே தவறான செயல்களே. பிரச்சினைகளை நினைத்து கவலைபட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் அதே சமயம் கவலையேபடாமலும் இருக்கக்கூடாது. கூடுமானவரை எந்த ஒரு பிரச்சினையையும் பிரச்சினைக்குக் காரணம் என்று நீங்கள் நினைப்பவரோடு சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள தீர்மானிக்க வேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை கசப்பானதாகவே இருக்கும். நாம் அவ்வப்போது சின்னச் சின்ன தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை சந்தித்து அவற்றோடு போராடி வெற்றி பெறும் சமயங்களில் நம் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். நிச்சயம் அத்தகைய மகிழ்ச்சிக்கு ஈடுஇணை எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.

உங்களைத் தேடி வரும் பிரச்சினைகளை நீங்கள் பயமின்றி எதிர்கொள்ளத் தயாராகுங்கள். ஆனால் நீங்கள் யாருக்கும் பிரச்சினையாக இருக்காதீர்கள். பிரச்சினைகளை உங்கள் வாழ்க்கையை செப்பனிட வந்த ஒரு சிறந்த கருவி என்று நினைக்கத் தொடங்குங்கள். உண்மையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையை முழுமை அடையச் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com