நம்முடைய வாழ்க்கையில் பலமுறை நாம் தோல்வியை சந்தித்திருப்போம். இருப்பினும் திரும்பத் திரும்ப வெற்றி பெறுவதற்கு முயற்சிப்பதன் காரணம் என்ன? ஏனெனில், தோல்வி, அவமானம் ஆகியவை முற்றுப்புள்ளியல்ல. அதுவே வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை நமக்கு கொடுக்கக்கூடிய ஆரம்பப்புள்ளி. இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையை பார்க்கலாம் வாங்க.
ஒரு சின்ன பையன் தோட்டத்தில் இருக்கும் அவனுடைய தாத்தாவிடம் சென்று, ‘நான் வாழ்க்கையில் வெற்றிப்பெற என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறான். அதற்கு அந்த தாத்தாவும், ‘நான் இப்போது இரண்டு செடி நடப் போகிறேன். ஒன்று வீட்டிற்குள்ளேயும், இன்னொன்று வீட்டிற்கு வெளியே தோட்டத்திலும் வைக்கப் போகிறேன். இந்த இரண்டு செடியில் எது பெரிதாக வளரும்?’ என்று தாத்தா பேரனிடம் கேட்கிறார்.
அதற்கு பேரனும், ‘கண்டிப்பாக வீட்டிற்கு உள்ளே இருக்கும் செடிதான் பெரிதாக வளரும்’ என்று சொன்னான். ஏனெனில் அதற்கு தான் வெயில், புயல், மழை போன்ற எந்த பிரச்சனையையும் எதிர்க்கொள்ள தேவையில்லை. அதனால் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்கும் அந்த செடி தான் பெரிதாக வளரும் என்று சொன்னான்.
உடனே தாத்தாவும், ‘அப்படியென்றால் கொஞ்சம் காலம் காத்திருந்து பார்’ என்று சொல்லிவிட்டார். அந்த பையனும் சில வருடங்கள் கழித்து தாத்தா வீட்டிற்கு அந்த செடிகளை பார்ப்பதற்காக வருகிறான்.
தாத்தா வீட்டிற்குள் வைத்திருந்த செடி சற்றே பெரிதாக வளர்ந்திருந்தது. ஆனால் வீட்டிற்கு வெளியே வைத்த செடி ஒரு பெரிய மரமாக வளர்ந்து நின்றது. இதை பார்த்த பேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று தாத்தாவிடம் கேட்டான். அதற்கு தாத்தாவோ, வீட்டிற்கு வெளியில் வைத்த செடி மழை, வெயில், புயல் என்று எல்லா பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு எதிர்த்து போராடியதால்தான் இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது.
இதுவே வீட்டிற்குள் வைத்திருந்த செடியோ எந்த பிரச்சனைகளையும் எதிர்க்கொள்ளாமல் ஒரு கம்பர்ட் ஸோனில் இருந்ததால்தான் அதனால் பெரிதாக வளர முடியவில்லை என்று தாத்தா சொன்னார்.
இதுபோலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும்போதுதான் வளர்கிறோம். கம்பர்ட் ஸோனிலேயே இருந்தால், கடைசிவரை வளராமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டி வரும். எனவே, Failure is never final என்று தாத்தா அறிவுரை சொல்லி முடித்தாராம். உங்களுக்கும் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் கஷ்டம் ஏற்பட்டால் இந்த கதையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.