
காலம் எத்தனை மாறினாலும், என்றும் நமக்குள் நிலைத்து இருக்கவேண்டியது பாசம் எனும் உணர்வுதான். இன்று பாசத்தைப் போற்றிப் பாதுகாப்பது மிகவும் அரிதாகிவிட்டது.
மாசற்ற உள்ளமாய் இருந்தவை, காரணமே இல்லாமல் தூசு அடைந்து, அழுக்காகி விடுகிறது. காசு ஒன்றையே குறிக்கோளாய் எண்ணும் உள்ளமும், பாசம் என்றால் என்ன விலை என கேட்கும் நிலைமை வந்துவிட்டது.
வாழ்நாள் முழுவதும் நமக்குத் கிடைத்த பாசத்தைப் போற்றி மகிழ வேண்டும். அதைக் கொண்டாட வேண்டும்
உலகில் பிறந்த எவரும் தாய். தந்தை, சகோதர சகோதரி, பிளைகள், பேரன், பேத்தி என இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது.இந்த இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் யாவும் இறைவன் முடிவு செய்து தரும் சொந்தங்கள். எனவே, இந்த உறவுகளை நாம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காலம் முழுவதும் கிடைத்த உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் மனிதன் அப்படி இருப்பது இல்லை.
சகோதர உறவுகள் அனைவரும் ஒரே இரத்தத்தில் பிறந்து, ஒரே எச்சில் பாலை உண்டு வளர்ந்தவர்கள்தானே. சிறிய பிள்ளைகளாய் விளையாட்டுப் பருவத்தில் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
சில நேரங்களில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் இருக்கிறது. இத்தகைய பெருந்தன்மை நாளடைவில் மாறிவிடுகிறது. திருமணம் ஆனவுடன் தன் மனைவி, பிள்ளைகள் என்ற சிறிய வட்டத்தை அவனே போட்டுக்கொள்கிறான்
வயது ஆகும் பொழுது நல்ல மனப்பக்குவம் வரவேண்டும். ஆனால், எதிர்மாறாக எதிலும் சுயநலமே ஆதிக்கம் செலுத்துகிறது.
நமக்காக நம் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார். இன்று அவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என நினைக்கவேண்டும். இரத்த பாசத்தை அவ்வளவு விரைவாகத் தூக்கி எறிந்து விடக்கூடாது.
கணவன் எப்பொழுதும் தன் மனைவியின் அன்புக்குக் கட்டுப்பட்டு வாழலாம். ஆனால் மனைவியின் அடிமையாக மட்டும் வாழவே கூடாது.
கணவன் அவளுக்கு அடிமையாகிவிட்டால். அவனின் பாசம் மறக்கடிக்கப் படுகிறது.
புதிய உறவின் வரவில்,, பழைய உறவுகளை ஒதுக்கிவிடுகிறான். இப்படிப் பாசம் மறந்த உறவுகளில்தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
அதேபோல் மறுபக்கமும் தன் மகன் திருமணம் ஆனவுடன், அடியோடு ஆள் மாறிவிட்டான். வீட்டில் அனைவரும் நினைக்கவும். பேசவும் ஆரம்பித்து விடுகின்றனர்.
இப்பொழுது அவன் முன்னர்போல் இல்லை எனவும் நினைக்கின்றனர். திருமணத்திற்குப் பின் அவன் மாறாமல் எப்பொழுதும்போல் இருந்தாலும், மற்றவர்கள் அவனை மாற்றி விடுவார்கள்.
அவன் மாறிவிட்டான் என மற்றவர்கள் மனமாரக் கூறும்போதும், நினைக்கும்போதும் டெலிவரி முறையில் அவன் மனமும் மாறிவிடுகிறது.
மனதில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லும்மனப்பக்குவம் வரவேண்டும். அது வந்துவிட்டால் என்றும் பிரச்னைகள் வரவே வராது.
நம் குடும்பத்தில் பெரியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அன்பு கலந்த பரிவு காட்டி வாழவேண்டும். அப்பொழுதுதான் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும், எதிர்காலத்தால் நம்மைப் போலவே நம்மிடம் அன்பும், ஆதரவும் காட்டுவார்கள்.
ஆல்போல் தளைத்து வாழவேண்டும் என சிலர் வாழ்த்துவார்கள் ஆலமரம் வயதானவுடன் அதன் வேர்கள் பழுதுபட்டாலும், அதன் விழுதுகள் பூமியில் வேர் ஊன்றி தாய் மரம் முதல் அனைத்துப் பகுதிகளையும் எப்பொழுதும் தாங்கி நிற்கும். அதுபோல்தான் இருக்கவேண்டும். மனிதனின் உறவு கலந்த வாழ்க்கையும்.
பாசம் மறந்த உறவாய் வாழ்வது நன்றாக இருக்காது. அதில் எவ்விதப் பலனும் இல்லை.
மனித நேயத்துடன் வாழ்ந்து பழகுவோம்!