கோபத்திலும் மகிழ்ச்சியிலும் நேர்மையான வார்த்தைகளைச் சொல்லுங்கள்;
சில உறவுகள் சில காரணங்களால் பிரிந்திருக்கக் கூடும். பிறகு எப்பொழுதாவது சந்திக்கும்பொழுது புன்னகையுடன் சுகமாய் இருக்கிறீர்களா? என்று கேட்டால் நீங்களும் புன்னகைத்தபடியே நன்றாக இருக்கிறோம் என்று கூறுங்கள். இதனால் வருத்தம், கோபம் மாறி சந்தோசம் நிலவும். அன்று முழுவதுமே ஏதோ புதிதாக அடைந்த ஒரு மன மகிழ்ச்சி கிட்டும். உறவு மேம்படும்.
வறுமையிலும் செல்வத்திலும் எப்போதும் நடுநிலையில் இருங்கள்:
வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும். யாராவது ஏதாவது கொடுத்தால் அது தேவை இல்லை என்றால் வேண்டாம் என்று கூறுவதுதான் வறுமையிலும் செம்மை என்பது. அதேபோல் செல்வம் வந்த காலத்திலும் குறிப்பறிந்து உதவி செய்தால் அதைப் பெற்றுக் கொண்டவர் மனம் மகிழ்வர். அப்படி கொடுத்ததை திரும்பவும் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லறம் இதனால் உறவு பலப்படும்.
உங்களோடு பகைத்துக் கொண்ட உறவினருக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் கடமையைச் செய்யுங்கள்:
ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு நேரத்தில் அதன் சடங்கை செய்வதற்கு மகத்துவம் உண்டு. பூப்புனித நீராட்டு விழா என்றால் மாமா. பெண்ணுக்கு தோழியாக போக வேண்டும் என்றால் அது அத்தையின் கடமை. வீட்டில் அண்ணன் மகளுக்கு திருமணம் என்றால் தம்பிமார்கள் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும். இப்படி செய்து பாருங்களேன் உறவு பலப்பட்டே ஆகும்.
உங்களை நிராகரிப்போருக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள்:
வெள்ளம், மழை, காற்று, பெருந்தொற்று காலங்களில் எத்தனையோ பேர் நிராகரித்தவர்களுக்கு அக்கம் பக்கத்தில் பேசிக்கொள்ளாதவர் களுக்கு என்று உதவி செய்ததை கண்ணால் கண்டோம். அது போல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் தூக்கம் நிகழ்ந்திருந்தால் அப்பொழுது நீங்கள் அழையா விருந்தாளியாக சென்று உதவிக்கரம் நீட்டுங்கள். இதனால் மனிதாபிமானம் வளரும். நன்றி உணர்வும் மேம்படும். நிராகரித்ததே மறந்து போய்விடும்.
சிந்தனை செய்வதற்காகவே மௌனமாய் இருங்கள்:
ஏதாவது அலுவலக காரணமாக, தொழில் காரணமாக முக்கியமான விஷயங்களை பேச வேண்டியது இருந்தால் நன்கு சிந்தனை செய்யுங்கள். அதை மௌனமாக கையாளுங்கள். அப்பொழுது பேச வேண்டிய நேரத்தில் தடங்கல் இல்லாமல் பேச்சு வரும். கேட்போரும் மகிழ்ச்சி அடைவர். உங்கள் பேச்சு நற்சிந்தனையை வளர்ப்பதாக அமையும்.
இறைவனை நினைத்து போற்றுவதற்காகவே வாய் திறந்து பேசுங்கள்:
காலையில் எழுந்ததும் போற்றி போற்றி என்று இறைவனின் நாமாக்களை கூறி போற்றி வழிபடலாம். இதனால் வீட்டில் அதிகமாக தூங்குபவர்கள் கூட அமைதியாக எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். அவர்களும் உங்கள் வழி வந்து பக்தி வழியில் மனத்தைப் பதிப்பார்கள். இதனால் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டாரின் மகிழ்ச்சிக்கு சொல்ல வேண்டுமா என்ன?
பிறரிடம் இருந்து நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நியாயமாக வாழ நேரிய வழியைக் கடை பிடியுங்கள்.
நம் உறவு முறையில் உள்ளவர்களிடம் உள்ள நல்ல குணங்களை எப்பொழுதும் மனம் திறந்து பாராட்டுங்கள். அதுவே உங்களை நல்லவராக மற்றவர்களுக்கும் உணர்த்தும். பிறகு உங்கள் வழியையே அவர்களும் கடைப்பிடிப்பார்கள். இதனால் உறவு முறையில் ஒரு ஒட்டுதல் ஏற்படும்.
இந்த ஏழு வழிகளை பின்பற்றினால் உறவு பலப்படும். இதனால் மனதில் மகிழ்ச்சி கிட்டும். செய்வதை திருத்தச் செய்யலாம். வீட்டில் அமைதி நிலவினால் வெளியில் வேலை பார்ப்பவர்களுடன் சுமூகமான உறவைத் தொடர முடியும். சிடுசிடுப்புக்கே வழி இருக்காது. பிறகு திருப்தியாக அமைதியான வழியில் எல்லாவற்றையும் ஆனந்தமாக அடையலாம்.