மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம்! மன்னித்து விடுங்களேன்!

Cancer
Cancer
Published on

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது, உங்கள் மூளையில் ஒரு ஹார்மோன் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அது மேலும் வலுவானதாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

’தவறு செய்வது மனிதனின் இயல்பு. மன்னிப்பது  தெய்வ குணம்’ என்பது நாம் அறிந்த ஒரு சொல்லாடல். 'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். 'Campaign for Forgiveness Research' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'Learn To Forgive' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார். மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். 

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது. முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம். 'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம். ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? 

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள முடியும். மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். 

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும். அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

இதையும் படியுங்கள்:
எப்படித்தான் இந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிப்பது…?
Cancer

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும். பல வேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். 

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும். மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள். மன்னித்து மகான் ஆகுங்கள். மன நோய்களில் இருந்தும் விடுபடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com