ஜப்பானிய மொழியில் GENKI என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதனுடைய அர்த்தம் என்னவென்றால், உடல் நலம் என்று பொருள். அதற்கு இன்னொரு பொருளை நாம் தேடிப் பார்த்தோமேயானால், நல்ல உணர்வு என்பதும் அதற்கு இணக்கமாக இருக்கும். இந்த பதிவில் GENKI உணர்வைப் பற்றி பார்க்கலாம்.
அது என்னடா GENKI உணர்வு என்று கேட்கிறீர்களா?
சிறு குழந்தையைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உணர்வு ஏற்படும் அல்லவா?
நாம் வீட்டுக்கு வரும் வேளையில் நம்முடைய செல்லப்பிராணி நம்மை நோக்கி ஓடி வரும்போது ஒரு உணர்வு ஏற்படும் அல்லவா?
நம்முடைய நண்பன் "மச்சான் நான் இன்னைக்கு ட்ரீட் வைக்கிறேன்டா" அப்படின்னு சொல்லும்பது ஒரு உணர்வு ஏற்படும் அல்லவா?
இதுபோன்ற இனம் இனம்புரியாத மகிழ்ச்சியைத்தான் GENKI உணர்வு என்பார்கள். இந்த உணர்வு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நமக்கு அபரிமிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இதுபோன்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. முடிந்தவரை இந்த உணர்வை ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் முயலுங்கள்.
இத்தகைய உணர்வை நீங்கள் பெற, முன்பின் தெரியாத நபர்களோடு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கருத்து பகிர்தல் மூலமாக, ஒரு விஷயத்தின் மீதான பிறருடைய கோணத்தையும் நாம் அறிந்துகொண்டு, நம்முடைய தவறை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் இந்த உரையாடல் மூலமாக அந்த மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவது நமக்குப் பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்வதன் மூலமாகக் கூட ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்முள் ஏற்படும் என்கிறார்கள். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்யும் செயலானது நம்மையே நமக்கு உயர்ந்த குணம் கொண்டவராக தெரியப்படுத்தி, மனமகிழ்ச்சியை ஏற்படுத்துமாம்.
இறுதியாக வெளி உலகப் பயணம் என்பது இத்தகைய உணர்வை அனுபவிப்பதற்கு ஒரு மிகப் பெரிய காரணியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக நாம் தினசரி நடைப்பயிற்சி செல்கிறோம் என்றால், அங்கே வழியில் பல விஷயங்கள் நமக்கு காணக் கிடைக்கும்.
இயற்கையை ரசிக்க முடியும்.
யாருக்காவது சிறு சிறு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
முன்பின் தெரியாத நபர்களைக் கண்டு புன்முறுவல் பூக்கலாம்.
பலவித மனிதர்களின் தொடர்பு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை நாம் அறிந்துகொள்ள வெளியுலக பயணம் என்பது மிகவும் பேருதவி புரிகிறது.
எவ்வளவு தான் மிகப் பெரிய பிரச்சனையில் நாம் மூழ்கி இருந்தாலும், திடீரெனக் கிடைக்கும் இந்த GENKI உணர்வை நாம் உணர்வதென்பது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். முடிந்தவரை இந்த உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
ஆத்மாத்தமான மகிழ்ச்சி எல்லாவிதமான துன்பங்களையும் மறக்கடித்துவிடும். நான் கூறிய சிலவற்றைத் தாண்டி பல விஷயங்களில் அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். முடிந்தவரை வாழ்வில் எல்லா தருணங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.